இந்தியா

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு: நாடாளுமன்றத்தில் அமித் ஷா இன்று அறிக்கை 

செய்திப்பிரிவு

நாகாலாந்து மாநிலத்தில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின்பேரில் பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிக்கை சமர்ப்பிக்கிறார்.

நாகாலாந்தில் மியான்மர் எல்லையருகே உள்ள மோன் மாவட்டத்தையொட்டிய கிராமத்தில் நாகா தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் கடும் சோதனையில் மேற்கொண்டனர். இந்நேரத்தில் பணியில் இருந்த வீரர்களுக்கும் ஒரு கும்பலுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது தீவிரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படையினர் சுட்டனர்.

இதில் பொதுமக்கள் 6 பலியாகினர். இவர்கள் அனைவரும் 15 கி.மீ. தொலைவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்த கூலித் தொழிலாளர்கள் ஆவார்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் ஊருக்கு வந்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தவர்கள். தங்களது கிராமங்களுக்கு செல்ல காத்திருந்த போதுதான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் கொல்லப்பட்டார். பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

வன்முறையை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் மீண்டும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மேலும் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என்றும், வருத்தமளிப்பதாகவும் ராணுவம் தெரிவித்தது. இந்தசம் சம்பவம் தொடர்பாக உயர் மட்ட விசாரணை நடத்தப்படும், மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தெரிவத்து இருந்தார்.

இந்தநிலையில் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிக்கை சமர்ப்பிக்கிறார். பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்ப எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே திட்டமிட்டுள்ளன. இதையடுத்து மத்திய அரசு விளக்கமளிக்கும் விதமாக அமித் ஷா அறிக்கை இருக்கும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT