டெல்லிக்கு அருகில் உத்தர பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மதுரா, கிருஷ்ண ஜென்ம பூமியாகக் கருதப்படுகிறது. இங்குள்ள கிருஷ்ணன் கோயிலை ஒட்டியபடி, 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கியான்வாபி ஷாயி ஈத்கா மசூதி உள்ளது. அங்கிருந்த பழமையான கிருஷ்ணன் கோயிலை இடித்துவிட்டு முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் அதன் ஒரு பகுதி நிலத்தில் மசூதி கட்டியதாக வரலாறு கூறுகிறது.
இதனால், மசூதியின் நிலத்தை கோயிலுக்கு அளிக்க வேண்டும் என்று பல ஆண்டு களாக இந்துக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அயோத்தியின் பாபர் மசூதி இடிப்புக்கு பின் மத்திய அரசால் ‘புனிதத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991’ இயற்றப்பட்டது. அதன்பின் அப்பிரச்சினை அடங்கிப் இருந்தது. இதன் மீது தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளும் அந்த சட்டத்தின் காரணமாக நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், அயோத்தி நில வழக்கில் 2019 உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பாபர் மசூதி நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு பின் வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் மதுராவின் கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் ஆகியவற்றின் பிரச்சினை மீண்டும் கிளம்பியுள்ளது.
இதுதொடர்பாக இந்துத்துவா அமைப்பினர் மதுரா நீதிமன்றங்களில் மீண்டும் வழக்குகளை தொடுத்துள்ளனர். இவை விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கியான்வாபியினுள் சிலை வைத்து பூஜிக்க இருப்பதாக தற்போது இந்துத்துவா அமைப் பினர் அறிவித்துள்ளனர்.
அகில பாரதிய இந்து மகாசபா, மதுராவின் இந்துத்துவா அமைப்புகளான நாராயணி சேனா, கிருஷ்ண ஜென்ம பூமி நிர்மான் நியாஸ் மற்றும் கிருஷ்ண ஜென்ம பூமி முக்தி தளம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் நிகழ்ச்சிகளை அறிவித்துள்ளனர். ஆனால், அமைதியை குலைக்கும் எந்த செயல்களுக்கும் அனுமதி அளிக்க முடியாது என்று மாவட்ட ஆட்சியர் நவ்நீத் சிங் சஹால் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ம் தேதி நிகழ்ச்சிகள் நடக்கும் என்று இந்துத்துவா அமைப்பினர் கூறியுள்ளனர். இதையடுத்து இன்று திங்கட்கிழமை மதுரா மாவட்ட எஸ்எஸ்பி கவுரவ் குரோவர் தலைமையில், 3 கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறப் பகுதி என 3 வட்டங்களாக மதுரா பிரிக்கப்பட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகளான 5 ஏஎஸ்பிகள், 40 ஆய்வாளர்கள் மற்றும் பிஏஎப் சிறப்பு படையின் 16 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14 டிஎஸ்பிகளும் 1,400 காவலர்களும் இடம் பெற்றுள்ளனர்.
மதுரா நகரம் முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. இந்நக ரில் இருந்து அருகில் உள்ள பிருந்தாவனுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் ரயில்கள் டிசம்பர் 6 தினத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் மதுராவாசிகள் பலத்த சோதனைகளுக்கு இடையே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதன் காரணமாக, 144 தடை உத்தரவும் பிறப் பிக்கப் பட்டிருப்பதால் மதுராவில் பதற் றம் நிலவுகிறது.