பாஜக எம்.பி. வருண் காந்தி | கோப்புப் படம். 
இந்தியா

‘‘காங்கிரஸ் மொழியில் பேசாதீர்கள்; ராஜினாமா செய்து விடுங்கள்’’ - வருண் காந்தி மீது பாஜக எம்.பி. சாடல்

ஏஎன்ஐ

வருண் காந்தி வரவர காங்கிரஸ் பாஷையில் பேசிவருகிறார், ஏன் அவர் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்துவிடலாமே என்று உ.பி.யைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி..ஒருவர் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் அரசுப் பள்ளிகளில் உதவி ஆசிரியர்கள் காலியிடம் நிரப்பவேண்டும் என்று கோரிக்கை வைத்து நேற்று (சனிக்கிழமை) 69,000 மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்தை ஊர்வலமாக நோக்கிச் சென்றனர்.

அப்போது போலீஸார் அவர்கள் மீது கடுமையான தடியடிப் பிரயோகம் நடத்தியுள்ளனர். இதில் ஏராளமானவர்கள் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்திற்கு முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆசிரியர்கள் மீதான போலீஸாரின் தடியடிப் பிரயோக வீடியோவை வெளியிட்டு பாஜகவின் வருண்காந்தி எம்.பி. தடியடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தடியடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் வீடியோவைப் பகிர்ந்து, வருண் காந்தி ஞாயிற்றுக்கிழமை ட்வீட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

"இவர்களும் பாரத் மாதாவின் குழந்தைகள்தான். அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதைப்பற்றிய மறதி உங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அக்கோரிக்கைகளை கேட்க கூட யாரும் தயாராக இல்லை. ஆனால் காட்டுமிராண்டித்தனமான லத்தி சார்ஜை மட்டும் அவர்கள் எதிர்கொள்ள வைக்கப்படுகிறார்கள்.

அவர்கள் உங்கள் குழந்தைகளாக இருந்திருந்தால் அவர்கள் இதேபோன்ற நடவடிக்கையை எதிர்கொண்டிருப்பார்களா? ஆசிரியர் பணிக்கு நிறைய காலியிடங்கள் உள்ளநிலையில் அதற்கு தேவையான தகுதியான படித்த விண்ணப்பதாரர்களும் இருக்கின்றனரே, பிறகு ஏன் நீங்கள் காலியிடங்களை நிரப்பவில்லை?''

இவ்வாறு வருண் காந்தி தெரிவித்துள்ளார்.

ராஜினாமா செய்துவிடலாமே: பாஜக எம்.பி. தாக்கு

இதற்கு பாஜகவினர் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. குறிப்பாக பாஜகவின் மாநிலங்களவை எம்.பியான ஹர்நாத் சிங் யாதவ் கடுமையாக வருண் காந்தியை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ஹர்நாத்சிங் யாதவ் எம்.பி. கூறியதாவது:

லக்னோவில் போராட்டக்காரர்கள் மீது தடியடிநடத்தியதற்காக தான் சார்ந்த உத்திரபிரதேச பாஜக அரசையே விமர்சித்துள்ளார் வருண் காந்தி. தனது சொந்தக் கட்சியின் தலைவரையே விமர்சனம் செய்கிறார்.

இப்போதெல்லாம் வருண்காந்தி காங்கிரஸின் பாஷையில் பேசுகிறார், அவரிடம் தார்மீக நெறி என்று ஒன்று இருந்தால், ஒரு வேளை பாஜகவுக்கு எதிராக பேசுவேன் என்று மனஉறுதியோடு முடிவு செய்திருந்தால், தாராளமாக ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸுக்கோ அல்லது வேறு எங்காவது போக வேண்டும்.

அவர் (வருண் காந்தி) கட்சியின் கண்ணியம் காக்க வேண்டும். அவர் பாஜகவில் இருக்கும்போது பாஜகவின் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு ஹர்நாத் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பாஜக மீது வருண் காந்தி விமர்சனம்

விவசாயிகள் மீது கார் ஏற்றிய சம்பவத்திலிருந்தே பாஜக எம்.பி.வருண்காந்தி தொடர்ந்து பாஜக அரசை விமர்சனம் செய்து வருவது கட்சியினரிடையே தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. விவசாயிகள் மீது மோதிய காரின் உரிமையாளர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர் பகிரங்கமான மத்திய அமைச்சரை குறிவைத்து குற்றம்சாட்டினார்.

அதுமட்டுமின்றி விவசாயிகளின் போராட்டம் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யாமல் இப்பிரச்சினை முடிந்துவிடாது. அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று பாஜக எம்.பி. வருண் காந்தி , பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இவை அனைத்தும் முற்றிலும் பாஜகவுக்கு எதிரானவையாக அமைந்துள்ளதாக கட்சி வட்டாரத்தில் வருண்காந்தி மீது அதிருப்தி நிலவி வருகிறது.

SCROLL FOR NEXT