இந்தியா

‘‘பதற்றமடைய வேண்டாம்; முன்னெச்சரிக்கை தேவை’’- உருமாறிய கோவிட் பற்றி வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

புதிய வகை கரோனா தொற்றுப் பரவல் குறித்து, பதற்றமடைய வேண்டாம், அதேசமயம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற விழாவில் அவர் பேசியதாவது:

கரோனா பெருந்தொற்று ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பெரும் சவாலாக உருவெடுத்திருப்பதுடன், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதிய வகை கரோனா தொற்றுப் பரவல் குறித்து, பதற்றமடைய வேண்டாம். ஆனால் தொற்றுப் பரவல் முடியும் வரை, கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

வாழ்க்கை எதிர்பார்ப்புகள், உள்ளார்ந்த நிதிச் சேவைகள், சுகாதார வசதிகள் கிடைக்கச் செய்வது, வேலைவாய்ப்பு, சொந்தவீட்டில் வசிப்பது, அல்லது தொழில்முனைவுத் திறனை கவுரவித்தல், இந்தியர்களின் வாழ்க்கைத் தரம் போன்றவை ஒவ்வொரு நாளும் மேம்பட்டு வருகிறது.

உள்ளார்ந்த நிதிச் சேவை, காப்பீட்டு வசதி, ஏழைப் பெண்களுக்கான சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு போன்ற பல்வேறு துறைகளில், கடந்த சில ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள அபரிமிதமான முன்னேற்றத்தையும் பாராட்டுகிறேன்.

குறைந்தபட்ச அரசாங்கம் அதிகபட்ச ஆளுகை என்ற கொள்கையைப் பின்பற்றுவதன் மூலம், அனைத்துத் துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த, நவீன தொழில்நுட்பங்களை அரசு பயன்படுத்துகிறது.

உலகிலேயே ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை அதிகளவில் தொடங்கும் நாடுகளில், இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT