இந்தியா

நெருக்கடி காலத்தில் உதவும் கடற்படை வீரர்கள்: இந்திய கடற்படை தினத்தில் பிரதமர் மோடி பாராட்டு

செய்திப்பிரிவு

நெருக்கடி காலத்தில் கடற்படை வீரர்கள் உதவுவதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரி வித்துள்ளார்.

1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரின்போது, டிசம்பர் 4-ம் தேதி அதிகாலை பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்துக்குள் நுழைந்த இந்திய கடற்படையினர் அங்கிருந்த போர்க் கப்பல்களை தாக்கி அழித்தனர். ‘ஆபரேஷன் டிரைடென்ட்’ என்றுஅழைக்கப்பட்ட இந்த தாக்குதலில்3 ஏவுகணை படகுகளான ஐஎன்எஸ் நிப்பட், ஐஎன்எஸ் நிர்காட், ஐஎன்எஸ் வீர் ஆகிய கப்பல்கள் கராச்சி துறைமுகத்துக்குள் நுழைந்து எண்ணெய் கிடங்குகளை துவம்சம் செய்தன.

2-ம் உலகப் போருக்குப் பின்னர் நடந்த மிகப் பெரிய கப்பற்படை தாக்குதல் இதுவாகும். இந்திய கடற்படையின் இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 -ம் தேதி இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் 1971-ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்தவர்களும் நினைவுகூரப்படுகின்றனர்.

இந்திய கடற்படை தினத்தை யொட்டி பிரதமர் மோடி நேற்று ட்விட்டரில், "இந்திய கடற்படையின் முன்மாதிரியான பங்களிப்புக்காக நாம் பெருமை கொள்கிறோம், இயற்கை பேரழிவுகள் போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர் கொள்வதில் நமது கடற்படை வீரர்கள் எப்போதும் முன்னணியில் உள்ளனர்" என பாராட்டி உள்ளார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் கடற்படை வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.- பிடிஐ

SCROLL FOR NEXT