மேற்குவங்க தலைநகர் கொல் கத்தா அருகே உள்ள வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் டீனா என்கிற சங்கீதா
அய்ச் (14). 9-ம் வகுப்பு மாணவியான இவர் இரு முறை தேசிய அளவிலும் ஒருமுறை மாநில அளவிலும் கைப்பந்து போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை கைப்பந்து போட்டிக்காக வீட்டின் அருகே உள்ள மைதானத்தில் டீனா தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது மைதானத்துக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கைப்பந்து வீரரான சுப்ரதா சின்ஹா (20) என்பவர், தன்னிடம் பேசும்படி டீனாவை வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த சின்ஹா, டீனாவை கத்தியால் வெட்ட முயன்றுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த டீனாவின் பயிற்சியாளர் ஸ்வபன் தாஸ், சின்ஹாவை தாக்கி டீனாவை காப்பாற்றினார். இதையடுத்து பயிற்சியை தொடர விரும்பாமல் டீனா அங்கிருந்து புறப்பட்டு தன் வீட்டுக்கு சென்றுள்ளார். எனினும் விடாமல் பின்தொடர்ந்து வந்த சின்ஹா, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வைத்து டீனாவை சராமாரியாக வெட்டி படுகொலை செய்தார். தடுக்க வந்த பொதுமக்களையும் தன்னிடம் இருந்த கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் டீனாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பிச் சென்ற சின்ஹாவை பிடிக்கவும் தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டனர்.
இதற்கிடையில் வடக்கு பர்கானாஸில் உள்ள ஜகதால் போலீஸ் நிலையத்தில் சின்ஹா நேற்று சரணடைந்தார். காதல் பிரச்சினையால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே பலமுறை டீனாவை, சின்ஹா மிரட்டியிருப்ப தாகவும் இது தொடர்பாக போலீஸாருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.