இந்தியா

வளர்ந்த நாடுகளில் கூட கேள்விப்படாத நல்ல திட்டங்கள் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது: மக்களவையில் செந்தில்குமார் பெருமிதம்

ஆர்.ஷபிமுன்னா

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கரோனா மீதான விவாதத்தில் திமுக எம்.பியான டாக்டர் செந்தில்குமார் உரையாற்றினார். அப்போது, மக்களைத் தேடி மருத்துவ திட்டங்கள் வளர்ந்த நாடுகளில் கூட கேள்விப்படாத திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாக பெருமிதம் கொண்டார்.

இதுகுறித்து கரோனா மீதான விவாதத்தில் பங்கேற்று தருமபுரி மக்களவை தொகுதி எம்.பி.யும் மருத்துவருமான செந்தில்குமார் பேசியதாவது:

கடந்த குளிர்கால கூட்டத்தொடரில், பெரும்பாலான உறுப்பினர்களும் இரண்டாவது அலை வரப்போகிறது என பலமுறை எச்சரித்தனர்.

இருந்தபோதிலும், மத்திய அரசு எங்களின் நியாயமான குரல்களுக்கு செவி சாய்க்கவில்லை. மேலும் நவம்பர் 2020 ஆம் வருடம் நான் உறுப்பினராக இருக்கும் சுகாதாரம் நிலைக்குழுவிவிலும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அதற்கு உடனடியாக அரசாங்கம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் எச்சரித்திருந்தோம்.

ஆனால் யாருடைய கோரிக்கையையும் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. இறுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் முதல் அலையில் முகக்கவசம், பிபிஇ உபகரணங்கள் மற்றும் கிருமிநாசினிகள் பற்றாக்குறையாக இருந்தது. இரண்டாவது அலையில், ஆக்ஸிஜன்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் பற்றாக்குறையாக இருந்தது.

இரண்டாவது அலை முதல் அலையை விட மிகத் தீவிரமாக தாக்கியது, அவை இளைஞர்களை கூட விட்டுவைக்காமல், அவர்களது பல குடும்பங்களும் பாதிக்கப்பட்டன, இந்தியாவில்

உள்ள அனைத்துக் குடும்பங்களிலும் கரோனாவின் பாதிப்பு வெளிப்படையாகவே தெரிந்தது.

தமிழ்நாட்டில் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் திராவிடக் கொள்கைகளோடும், சித்தாந்தங்களோடும் திமுக ஆட்சிக்கு வந்தது. பெரியாரின் கனவோடு, அண்ணாவின் திட்டத்துடன், கலைஞர் கருணாநிதியின் தொலை நோக்குப் பார்வையுடன்; முதல்வர் மு.க.ஸ்டாலிமன் மக்கள் சார்ந்த திட்டங்களை கடைசி கிராமம் வரை செயல்படுத்தினார்.

தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த பணிக்கப்பட்டனர். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 4000 வழங்கபட்டதால், அனைத்து தரப்பட்ட குடும்பங்களின் குறைந்தபட்சம் பொருளாதார பாதிப்பை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

ஆக்ஸிஜன் உற்பத்தி பற்றாக்குறையை சரியாக திட்டமிட்டு தமிழக அரசாங்கம் முன்முயற்சி எடுத்தது. இதனால், தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது இரண்டு ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.

அதேபோல மருத்துவமனை படுக்கைகளைப் பொறுத்தவரை சுமார் 300 முதல் 1000 படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதியுடன் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதுமட்டும் அல்லாமல் முன்கூட்டியே மூன்றாவது அலை எச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன.

தமிழகம் முழுவதும் வாரத்திற்கு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்கள் சிரத்தன்மையுடன் நடத்தப்பட்டன. தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கூட இலவச தடுப்பூசிகளை வழங்குவதற்கு அரசு ஏற்பாடு செய்தது.

இதனால் அரசு மருத்துவமனையில் மட்டும் தான் இலவச தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும் என்ற நிலை இல்லாமல், தனியார் மருத்துவமனையிலும் தடுப்பூசி போட வழி வகை செய்யபட்டன.

செங்கல்பட்டு ஹெச்.பி.எல் தடுப்பூசி மைய வளாகம் ஏற்கனவே நிறுவப்பட்டு செயல்பாடு இல்லாமல் உள்ளது மேலும் அவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்

என்பதை சுட்டி காட்டி எங்கள் முதல்வர் அவர்கள் தொடர்ந்து மத்திய அரசை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழக அரசே இந்த வளாகத்தை எடுத்து நடத்தும் என்ற ஆலோசனையும் அளித்துள்ளார். ஆனால், இன்று வரை ஒன்றிய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை.

மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் வளர்ந்த நாடுகளில் கூட கேள்விப்படாத திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சாமானியர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது.

அதனுடன் 30 நாட்களுக்கான மருந்துகளும் விநியோகிக்கப்படுகின்றன. நீரழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்களின் சிகிச்சைகள் கூட சாமானியர்களின் இல்லங்களைத் தேடி கொடுக்கப்படுகிறது.

தமிழ்நாடு சுகாதாரத்தில் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறோம். இதை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் பெரிய மாற்றங்கள் வரக்கூடும்.

எங்கள் முதல்வர் நாளுக்கு நாள் அவரின் செயல்களால் அளவுகோளை உயர்த்திக்கொண்டே இருக்கிறார் இதனால் தலைசிறந்த மாநிலமாக தமிழகம் மீண்டும் மாறிக்கொண்டிருக்கிறது.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து 200 நாட்களுக்கு மேல் ஆகியுள்ளது, முதல்வர் அவர்கள் மக்களின் எதிர்பார்ப்புகளை மிஞ்சி செயல்படுகிறார். இது, மக்கள் வாக்கெடுப்பு மூலமாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில், மாநிலங்களின் சிறந்த முதலமைச்சர்களுக்கான தரவரிசையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் இடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பலதரவரிசைகளில் தமிழகமும் முதல் மாநிலமாக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT