அவையின் மாண்பை கெடுப்பது ஜனநாயகமா என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். கோப்புகளை தூக்கி வீசி, அவை காவலர்களை தாக்கினர். மாநிலங்களவையின் மாண்பை கெடுக்கும் வகையில் செயல்பட்ட 12 எம்.பி.க்கள் நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலங்களவை நேற்று கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையின் மையப் பகுதியில் கூடி கோஷமிட்டனர். எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி அவர்கள் அமளியில் ஈடுபட்டதால் பலமுறை அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதுதொடர்பாக குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடு அவையில் கூறியதாவது:
அவையில் அவமரியாதையுடன் நடப்பது ஜனநாயகம் என்று வாதிடுகின்றனர். அவையின் மாண்பை கெடுக்கும் வகையில் செயல்பட்டோர் மீது நடவடிக்கை எடுத்தால் ஜனநாயக விரோதம் என்று குற்றம்சாட்டுகின்றனர். அவையின் மாண்பை கெடுப்பதுதான் ஜனநாயகமா? இதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
தவறை யாரும் நியாயப்படுத்த முடியாது. தவறுக்கு இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. ஆனால் இடைநீக்கத்தை திரும்ப பெறும்படி கோரிக்கை விடுக்கின்றனர். இதுதான் ஜனநாயக மரபா?
கடந்த 3 நாட்களாக அவையில் எந்த அலுவலும் நடைபெறவில்லை. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவை மாண்பை மீறியதாக எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த 1962 முதல் 2010 வரை 11 முறை எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவை அனைத்துமே ஜனநாயக விரோதமா? இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டியது அவசியம். இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்
- பிடிஐ