இந்தியா

கர்ப்பிணிகள் ரத்த சோகையை தடுக்க முயற்சி

செய்திப்பிரிவு

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை பிரச்சினைக்கு தீர்வுகாண உலக சுகாதார நிறுவனத்துடன் இணைத்து மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் உறுப்பினர்களின்கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தசுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறியதாவது:

நாட்டில் 50 சதவீதத்துக்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்களை பாதிக்கும் ரத்த சோகை பிரச்சினையை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடும்பசுகாதார கணக்கெடுப்பு தரவுகளின்படி, இந்தியாவில் 15-49 வயதுக்குட்பட்ட 52.2 சதவீத கர்ப்பிணிப் பெண்களுக்கு ரத்த சோகை பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அதிக அளவாக லடாக், பிஹார் மற்றும் குஜராத்தில் முறையே 78.1%, 63.1% மற்றும் 62.6% கர்ப்பிணி பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சத்தீவுகள், நாகாலாந்து மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் குறைந்த அளவாக 20.9%, 22.9% மற்றும் 27.9% இந்தப் பிரச்சினை உள்ளது. ரத்தசோகை பிரச்சினைக்குத் தீர்வு காண உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறினார்.

SCROLL FOR NEXT