டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அடுத்த 24 மணிநேரத்திற்குள் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு, டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு கடுமையாக உயர்ந்து வருகிறது. இதுதொடர்பான பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரணை நடத்திய போது, டெல்லிகாற்று மாசுக்கு ஹரியாணா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகள் எரிக்கப்படுவதும், கட்டட கட்டுமானங்களும் தான் காரணம் என டெல்லி அரசு கூறியிருந்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்டெல்லியில் கட்டுமானநடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன
இந்த வழக்கு விசாரணை,தலைமை நீதிபதி என்.வி. ரமணா,நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர்அடங்கிய அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது. அப்போது காற்றுமாசை குறைக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசும், டெல்லி அரசும் அறிக்கை அளித்தன. இவற்றை ஆய்வு செய்த பிறகு நீதிபதிகள் கூறியதாவது:
டெல்லியில் காற்று மாசுபாட்டைகட்டுப்படுத்த கடந்த சில வாரங்களாக மத்திய அரசும், டெல்லிஅரசும் எடுத்துள்ள எந்த நடவடிக்கையும் பலனளிக்கவில்லை. இந்த நடவடிக்கைகளால் காற்று மாசு துளியளவும் குறையவில்லை. மாறாக, மாசுபாட்டின் அளவு மேலும் அதிகரித்துள்ளது. . இதுபோன்ற சூழ்நிலையில், பள்ளிகளை திறக்க டெல்லி அரசு உத்தரவிட்டிருக்கிறது. காற்று மாசுபாட்டால் பெரியவர்களை வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு அரசு கூறுகிறது. ஆனால், 4 - 5 வயது குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என அரசு கூறுகிறதா? இது என்ன மாதிரியான நடவடிக்கை என புரியவில்லை.
டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுக்கு வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை தான் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. எனவே, இவற்றை கட்டுப்படுத்த அடுத்த 24 மணிநேரத்திற்குள் மத்திய அரசும்,டெல்லி அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
பள்ளிகள் மூடல்
உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பை அடுத்து, டெல்லியில் உள்ள பள்ளிகளை காலவரையின்றி மூட மாநில அரசு நேற்று உத்தரவிட்டது. காற்று மாசு காரணமாக கடந்த சில வாரங்களாக டெல்லியில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இந்த சூழலில், கடந்த திங்கள்கிழமை முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என அரசு தெரிவித்திருந்தது. டெல்லி அரசின் இந்த நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, பள்ளிகளை மூடுமாறு அரசு உத்தரவிட்டிருக்கிறது
.-பிடிஐ