மத்திய அரசு கொண்டு வந்த 3 புதியவேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் கடந்த ஓராண்டாக போராடி வந்தனர். இதையடுத்து, இந்த சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த 29-ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து விவசாய சங்க நிர்வாகிகள் வட்டாரங்கள் கூறும்போது, “புதிய சட்டங்களை எதிர்த்து 32 விவசாய சங்கங்கள் போராடி வந்தன. இந்நிலையில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து வரும் 4-ம் தேதி கூடி முடிவெடுக்கவுள்ளோம்.
டிசம்பர் 4-ம் தேதி சம்யுக்த கிசான்மோர்ச்சா (எஸ்கேஎம்) விவசாய சங்கத்தின்கூட்டம் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும். மேலும் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவுவிலை (எம்எஸ்பி) தரும் சட்டத்தை இயற்றுவது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்துவோம்” என்று தெரிவித்தன.
இதுகுறித்து பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் பாரதிய கிசான் யூனியன் அமைப்பின் தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரஹான் கூறும்போது, “போராட்டத்தை விரைந்து முடிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. எம்எஸ்பி சட்டம் குறித்து மத்திய அரசு தெளிவான பதிலைத் தர வேண்டும். மேலும் விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை நடத்துவோம்" என்றார்.- பிடிஐ