பெங்களூரு காங்கிரஸ் பிரமுகர் கோபாலகிருஷ்ணா, எலஹங்கா தொகுதியின் பாஜக எம்எல்ஏ எஸ்.ஆர்.விஷ்வநாத்தை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக புகார் எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்க ளூரு காங்கிரஸ் பிரமுகர் கோபாலகிருஷ்ணா கடந்த தேர்தலில் எலஹங்கா தொகுதியில் தோல்வி அடைந்தார். இதனால் அதிருப்தி அடைந்த அவர், தனது ஆதரவாளர் குள்ளா தேவராஜ் உடன் பேசிய வீடியோ காட்சி நேற்று சமூக வலைதளங்களில் வெளியானது.
அதில் கோபாலகிருஷ்ணா, ''எலஹங்கா தொகுதி பாஜக எம்எல்ஏ எஸ்.ஆர்.விஷ்வநாத்தை முடிக்க (கொல்ல) ஒரு கோடி ரூபாய் ஆகுமா? பரவாயில்லை. பணம் நான் கொடுக்கிறேன். வேலையை ரகசியமாக முடித்து விடு'' என்கிறார். இந்த வீடியோ ஊடகங்களில் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து பாஜக எம்எல்ஏ விஷ்வநாத் கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவை சந்தித்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். கோபாலகிருஷ்ணா, குள்ளா தேவராஜ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறும்போது, ‘‘இதுகுறித்து விசாரணை நடத்த பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட் டுள்ளேன். சம்பந்தப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய தண்டனை பெற்றுத் தரப்படும்''என்றார்.
போலீஸார் குள்ளா தேவராஜி டம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, ‘‘சம்பந்தப்பட்ட வீடியோ 5 மாதத்துக்கு முன்பு எடுக்கப்பட்டது. தேர்தலில் தோல்வி அடைந்ததால், அப்போது கோபத்தில் கூறினார்’' என்று கூறியுள்ளார். தற்போது கோபாலகிருஷ்ணாவிடம் விசா ரணை நடத்தப்பட உள்ளது.