உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் வினாத்தாள் கசிந்ததை அடுத்து மாநில தேர்வாணையச் செயலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில், தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களை நியமிப்பதற்காக ஆண்டுக்கு ஒருமுறை மாநில அளவிலான தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வாறு ஞாயிற்றுக்கிழமை இத்தேர்வு நடைபெற இருந்த நிலையில் வினாத்தாள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை தேர்வை ரத்து செய்தது.
இதுகுறித்து உத்தரப் பிரதேச காவல்துறையின் சிறப்புப் படை யின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் அமிதாப் யாஷ் கூறியதாவது:
ஞாயிற்றுக்கிழமை தேர்வு நடைபெற இருந்த நிலையில், சனிக்கிழமை இரவு ஐந்துமாவட்டங்களைச் சேர்ந்த 29 பேரிடம் வினாத்தாள் இருந்தது கண்டுபிடித்து மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 29 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆசிரியர்களின் தகுதித் தேர்வு வினாத்தாள்கள் கசிவு தொடர்பாக, தேர்வு ஒழுங்குமுறை ஆணையச் செயலர் சஞ்சய் குமார் உபாத்யா (Secretary of Exam Regulatory Authority)வை உத்தரப் பிரதேச காவல்துறையின் சிறப்புப் படை புதன்கிழமை கைது செய்தது. தற்போது இவர் துறைசார் நடவடிக்கைகளால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வினாத்தாள் கசிந்தது தோடர்பாக கடந்த நான்கு நாட்களில் தொடர்பாக 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கசிவு தொடர்பான பல மணிநேர விசாரணைக்குப் பிறகு உபாத்யாயா கைது செய்யப்பட்டார். டெல்லியைச் சேர்ந்த அச்சகத்தின் இயக்குநர் ராய் அனூப் பிரசாத், இந்த விவகாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டார்.
பிரசாத்திடமும் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, வினாத்தாள்களை அச்சிடுவதற்கான உத்தரவை உபாத்யாய் தனது அச்சக நிறுவனத்திற்கு அக்டோபர் 26 அன்று பிறப்பித்தார் என்று பிரசாத் விசாரணையில் கூறியுள்ளார்.
இவ்வாறு கூடுதல் இயக்குநர் ஜெனரல் அமிதாப் யாஷ் தெரிவித்தார்.