கேரள முதல்வர் பினராயி விஜயன் | படம் ஏஎன்ஐ 
இந்தியா

தடுப்பூசி செலுத்தாதவர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டால் இலவச சிகிச்சை இல்லை: கேரள முதல்வர் அறிவிப்பு

ஏஎன்ஐ

கேரளாவில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை வழங்கப்படமாட்டாது என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று முதல் அலையில் கடும் கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து கரோனாவில் பெரிதாக பாதி்க்கப்படாமல் தப்பித்தது. ஆனால், கரோனா 2-வது அலையில் கேரள மாநிலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.

கடுமையான கட்டுப்பாடுகள், தடுப்பூசி செலுத்துதல் போன்றவற்றை தீவிரமாகக் கடைபிடித்ததன் காரணமாக தற்போது கரோனா தொற்று குறைந்து வருகிறது. இருப்பினும் கேரளாவில் இன்னும் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தாதவர்கள், 2-வது டோஸ் செலுத்தாதவர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

இந்த சூழலில், கரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவல் அச்சமும் சேர்ந்திருப்பதால் கேரள அரசு கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. இது குறித்து முதல்வர் பினராயி விஜயன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “கேரளாவில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை கிடையாது. அவர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டால் இலவச சிகிச்சையும் வழங்கப்படாது.

தடுப்பூசிசெலுத்தாத ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள் மக்களுடன் தொடர்பில் இருப்போர் வாரந்தோறும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளை வழங்க வேண்டும்.

இந்தப் பரிசோதனைகளுக்கு அவர்களே கட்டணத்தையும் செலுத்தி அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். ஒமைக்ரான் வைரஸ் குறித்த அச்சம் பரவி வருவதால், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அளித்த பேட்டியில் “வெளிநாடுகளில் இருந்து வருவோரைக் கண்காணிக்கவும், அவர்களிடம் இருந்து மாதிரிகளை சேகரிக்கவும் கேரளாவின் 4 விமானநிலையங்களிலும் சுகாதாரப் பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதன்விவரங்களை மாவட்ட நிர்வாகத்துக்கும், போலீஸாருக்கும் அனுப்பி வைப்போம். எச்சரிக்கை பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் கேரளமாநிலத்தவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். முதல்நாளில் ஒரு பிசிஆர் பரிசோதனையும், 8-வது நாளில் பிசிஆர் பரிசோதனையும் எடுத்து அதில் நெகட்டிவ் வர வேண்டும். ஒட்டுமொத்தமாக 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT