பொதுமக்களுக்கு அளிக்கப்படும் இலவசங்களை மாநில அரசு மட்டுமே அளிப்பதாகவும் அதில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்பது போல காட்டப்படுவது தவறு என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார். மக்களவையில் அதிமுக உறுப்பினர் ஆர்.பி.மருதராஜா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இது குறித்து பாஸ்வான் மக்களவையில் கூறியதாவது: தமிழகத்தில் சில நிபந்தனைகளின் பேரில் அனைவருக்கும் இலவச அரிசி மற்றும் கோதுமை விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவை தமிழக அரசு அளிப்பதாகக் கூறப்படுவது தவறாகும். இதில் ரூ. 30 அளிக்கப்படுகிறது எனில் அதன் ரூ.27 மத்திய அரசின் நிதியாகும். மீதமுள்ள ரூ.3 மட்டுமே மாநில அரசின் செலவாகும். பிஹார் போன்ற சில மாநிலங்கள் எதையும் தருவதில்லை. இந்த 3 ரூபாயை பொதுமக்களே தருகின்றனர்.
பிரச்சினை என்னவெனில் இந்த தொகையை ஒவ்வொரு மாநில அரசும் தாங்களே அளிப்பதாகவும், இதில் மத்திய அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் காட்ட முயல்கின்றன. இது தவறாகும். இதில் மத்திய அரசின் பங்கு 91 சதவீதம் எனில் மாநில அரசின் பங்கு 9 சதவீதம் ஆகும். இந்த தொகையில் அரிசி, கோதுமை தவிர வேறு பொருட்களையும் மாநில அரசு தரவிரும்பினால் அதன் மீது முடிவு எடுக்க அவற்றுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்றார்.
பெரம்பலூர் தொகுதி எம்.பி. மருதராஜா கேள்வி எழுப்பும்போது, “தமிழகத்தின் பொது விநியோக முறை அதன் மாதிரி திட்டத்துக்காக இந்தியா மற்றும் உலக அளவில் பாராட்டப்படுகிறது. இதுபோன்ற திட்டத்தை நாடு முழுவதிலும் உள்ள ஏழைகளும் பலன் பெறும் வகையில் மத்திய அரசு அமல்படுத்துமா?” என்றார்.
இதற்கு பாஸ்வான், “வரும் 2019-ம் ஆண்டுக்குள் பொது விநியோக முறையை கணினிமயமாக்குவது உட்பட அனைத்துக்கும் முயற்சி எடுக்கப்படும்” என்றார். பிஹார் மாநில கட்சியான லோக்ஜனசக்தியின் தலைவரான பாஸ்வான், தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணியின் உறுப்பினர்களில் ஒருவராக இருப்பவர்.
சமீபத்தில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது, “தமிழக வெள்ள நிவாரணத்துக்காக மத்திய அரசு நிதி வழங்கி இருந்தது. இந்த நிதியைத்தான் தமிழக அரசு தனது நிதியாகக் கூறி மக்களுக்கு அளித்தது” என்றார். தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் கூட்டணிப் பேச்சு நடத்த தமிழகம் வந்த போது ஜவடேகர் இதை தெரிவித்தார். தமிழக அரசு அளித்துள்ள இலவசங்கள் மீது மத்திய அமைச்சர்களின் கருத்து வெளியாவது முதன் முறை ஆகும். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வெளியாகி உள்ள கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.