இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. ஒமைக்ரான் வைரஸை எதிர்த்துப் போராட அனைத்து நிலைகளிலும் தயாராக உள்ளோம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக ஓமைக்ரான் வகை ைவரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரி்ட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.
இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸால் இந்தியாவில் இதுவரை பாதிப்பு கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் கூறியதாவது:
இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. ஒமைக்ரான் வைரஸை எதிர்த்துப் போராட அனைத்து நிலைகளிலும் தயாராக உள்ளோம். ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிற்குள் ஊடுருவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் யாரும் அச்சப்பட வேண்டாம். அனைத்து மாநிலங்களுடனும் தொடர்பில் உள்ளோம்.
இவ்வாறு மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.