இந்தியா

உ.பி.க்கு வாக்குறுதி தருவதை விட்டுவிட்டு ராஜஸ்தானில் வேலையை ஏற்படுத்திக் கொடுங்கள்: காங்கிரஸுக்கு இளைஞர்கள் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்று ராஜஸ்தானில் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது.

ஆனால், வேலை வாய்ப்புக்கு காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஜெய்ப்பூரில் இளைஞர் சங்கம் சார்பில் 47 நாட்களாக போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் தீர்வு ஏற்படாததால் கடந்த 26-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் உத்தரபிரதேசம் வந்தனர். வேலைவாய்ப்பு அளிக்க கோரி ராஜஸ்தான் காங்கிரஸ் அரசை வற்புறுத்தும் விதமாக லக்னோ வில் காங்கிரஸ் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து இளைஞர் சங்க தலைவர் உபேன் யாதவ் கூறுகையில், ‘‘உ.பி. தேர்தலை முன்னிட்டு அங்கு 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவோம் என்று காங்கிரஸ் கூறுகிறது. முதலில் ராஜஸ்தான் இளைஞர்களுக்கு காங்கிரஸ் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.மேலும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவை சந்திக்க அனுமதிக்க வேண்டும். உ.பி. தேர்தலில் காங்கிரசை எதிர்த்து பிரச்சாரம் செய்வோம்’’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT