உத்தரபிரதேச மாநிலம் மதுராவில்உள்ள கியான்வாபி மசூதியில்கிருஷ்ணர் சிலை வைக்கப்போவதாக இந்து அமைப்புகள் மிரட்டியதால் அந்நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ஊர்வலம் நடத்த முயன்ற 3 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தின் மதுரா நகரில் கிருஷ்ண ஜென்ம பூமி எனும் கோயில் உள்ளது. இது, கடவுள் கிருஷ்ணர் பிறந்த இடமாக இந்துக்கள் மத்தியில் நம்பிக்கை நிலவுகிறது.
இதற்கு முன் அங்கிருந்த பழமையான கோயில் இடிக்கப்பட்டு அதன் பாதி நிலத்தில் கியான்வாபி எனும் ஷாயி ஈத்கா மசூதி உள்ளது. இதை முகலாய மன்னர் அவுரங்கசீப், 17-ம் நூற்றாண்டில் கட்டியதாக வரலாறு கூறுகிறது. தற்போது அயோத்தியில் நிலவியதை போலவே மதுராவிலும் நிலப் பிரச்சினை இருந்து வருகிறது.
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பைவெளியிட்ட பிறகு மதுரா பிரச்சினை மீண்டும் கிளம்பியது. இப்பிரச்சினை மீதும் மதுராநீதிமன்றங்களில் இந்து அமைப்புகளால் வழக்குகள் தொடரப்பட் டுள்ளன.
இந்நிலையில், அயோத்தியில் இந்து அமைப்புகளால் 1992-ல்பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6 வரவுள்ளது. இதை ஒவ்வொரு ஆண்டும் வெற்றி தினமாக இந்து அமைப்புகள் கொண்டாடி வருகின்றன. இந்த நாளில் மதுராவின் கியான்வாபி மசூதியினுள் கிருஷ்ணர் சிலை வைக்கப் போவதாக சில இந்து அமைப்புகள் மிரட்டியுள்ளன.
மதுராவின் நாராயணி சேனா, அகில பாரதிய இந்து மகாசபா உள்ளிட்ட சில அமைப்புகள் இந்த மிரட்டலை விடுத்துள்ளன. இதனால், மதுராவில் அரசு நிர்வாகத்தால் 144 தடை உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது. இங்கு மதுரா ஆட்சியர் நவ்நீத்சிங் சஹாலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கவுரவ் குரோவரும் நேற்று நேரில் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
அனுமதி ரத்து
இதுகுறித்து மதுரா எஸ்எஸ்பி கவுரவ் குரோவர் கூறும்போது, “நகரில் எந்த இடத்தி லும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கிடையாது. மசூதியில் சிலை வைக்கப் போவதாக மிரட்டியவர் களை கைது செய்து வருகிறோம். நாராயணி சேனாவின் பொரு ளாளர் அமித் மிஸ்ரா, லக்னோ வில் ஒரு ஓட்டலில் கைது செய்யப்பட்டுள்ளார். மதுராவில் தடையை மீறி ஊர்வலம் நடத்த முயன்ற வழக்கில் அமித் மிஸ்ரா தவிர மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்திலிருந்த கோயிலை முகலாயப் பேரரசர் பாபர் இடித்து விட்டு அங்கு மசூதி கட்டியதாகப் புகார் உள்ளது. இதன் மீதான வழக்குகள் நீதிமன்றத்திலும் தொடர்ந்த நிலையில், கடந்த 1949, டிசம்பர் 23-ல் அம்மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டது. அப்போது முதல் அங்கு முஸ்லிம்கள் தங்கள் தொழுகையை நிறுத்தியிருந்தது நினைவுகூரத்தக்கது.