இந்தியா

அடுத்தகட்ட நடவடிக்கை? - டிசம்பர் 1-ம் தேதி முடிவு: சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவிப்பு

செய்திப்பிரிவு

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 1 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது.

மத்திய அரசு கடந்த ஆண்டு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்து எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றது. இந்த 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியின் புறநகர் எல்லைகளில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக போராடி வருகிறார்கள்.

விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருவதையடுத்து, இந்த 3 சட்டங்களையும் உச்ச நீதிமன்றமும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, 3 சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி மக்களுக்கு அறிவித்தார்.

இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாக்களை அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று தொடங்கிய நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கான மசோதா, இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் கையெழுத்திட்ட பின்பு வேளாண் சட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு விடும்.

ஏற்கெனவே நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் அணிவகுப்பு போராட்டம் நடத்தும் திட்டத்தை சம்யுக்த கிசான் மோர்ச்சா நிறுத்தி வைத்து இருந்தது.

எதிர்கால நடவடிக்கை குறித்து அடுத்த மாதம் கூட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்தநிலையில் இதுகுறித்து விவசாயிகள் சங்க நிர்வாகி ஹர்மீத் சிங் காடியன் கூறியதாவது:

டிசம்பர் 1 ஆம் தேதி விவசாயிக் அமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா கூட்டம் நடைபெறுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்துவது தொடர்பான எங்கள் கோரிக்கையைில் நாங்கள் உறுதியாக உள்ளோம். போராட்டம் குறித்த அடுத்த முடிவுகள் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT