இந்தியா

‘‘வருந்துகிறேன்; சிலர் புண்பட்டுள்ளனர்’’- பெண் எம்.பி.க்களுடன் சசி தரூர் செல்பியால் சர்ச்சை

செய்திப்பிரிவு

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பெண் எம்.பி.க்களுடன் எடுத்துக் கொண்ட செல்பி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிலர் உணர்வுகள் புண்படுத்தப்பட்டதற்கு வருத்தம் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனது டுவிட்டரில் 6 பெண் எம்.பிக்களுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதில் திரிணாமுல் காங்கிரஸின் நுஸ்ரத் ஜஹான் மற்றும் மிமி சக்ரவர்த்தி, அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர், தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே, காங்கிரசின் ஜோதிமணி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சசி தரூருடன் உடன் நின்றபடி செல்பி இடம் பெற்று இருந்தனர்.

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சசி தரூர் ‘‘மக்களவை வேலை செய்வதற்கு கவர்ச்சிகரமான இடம் இல்லை என்று யார் கூறுகிறார்கள்? இன்று காலை எனது ஆறு சக எம்.பி.க்களுடன்: @supriya_sule, @preneet_kaur, @TamizhachiTh, @mimichakraborty, @nusratchirps,
@JothimaniMP’’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது. இதனை பலரும் விமர்சித்து இருந்தனர். கவர்ச்சிகரமான எனக் கூறியதற்கு பெண்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து இநருந்தனர்.

‘‘நாடாளுமன்றத்தில் பெண்கள் உங்கள் பணியிடத்தை "கவர்ச்சிகரமானதாக" மாற்றுவதற்கான அலங்காரப் பொருட்கள் அல்ல. அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீங்கள் அவமரியாதையாகவும், பாலியல் ரீதியாகவும் நடந்து கொள்கிறீர்கள்’’ என சிலர் பதிவிட்டனர்.

இதை தொடர்ந்து சக பெண் எம்.பி.க்களுடன் செல்பி எடுத்தது வெறும் “பணியிட தோழமையின் நிகழ்ச்சி” என்று சசிதரூர் விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அடுத்த ட்வீட்டில் கூறியுள்ளதாவது:

முழு செல்ஃபி விஷயமும் (பெண் எம்.பி.க்களின் முயற்சியில்) நல்ல நகைச்சுவையுடன் செய்யப்பட்டது & அதே உணர்வில் அதை ட்வீட் செய்யும்படி அவர்கள்தான் என்னிடம் கேட்டார்கள். சிலர் மனம் புண்பட்டிருப்பதற்கு வருந்துகிறேன், ஆனால் இந்த பணியிட தோழமை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதெல்லாம் அவ்வளவுதான்’’ எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT