மாநிலங்களவையில் எம்.பி.க்கள் போராட்டம் நடத்திய போது கோப்புப் படம் 
இந்தியா

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்

செய்திப்பிரிவு

மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை நடக்க உள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது.

அதன்படி 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா மக்களவையிலும், பின்னர் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில், முன்னதாக நடந்த மழைகாலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அத்துமீறி நடந்து கொண்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் இந்த குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19-ம் தேதி தொடங்கியதில் இருந்து பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் விவகாரம் ஆகியவற்றை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியிலும், கூச்சல் குழப்பம் விளைவித்து வந்தன.

இதனால் இரு அவைகளும் சரியாக நடக்கவில்லை. ஒட்டுமொத்தமாக 17 மணி நேரம் 44 நிமிடங்கள் மட்டுமே மாநிலங்களவை செயல்பட்டது. அதில் 4 மணி நேரம் 49 நிமிடங்கள் மட்டுமே மசோதாக்களுக்காகச் செலவிடப்பட்டது.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. மேஜையின் மீது ஏறி போராட்டம் நடத்தினர். இதனால் நாடாளுமன்றத்தின் மாண்பு சிதைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு கட்சி எம்.பி.க்களும் தெரிவித்தனர்.

கண்ணீர் விட்ட வெங்கய்ய நாயுடு- கோப்புப் படம்

ஆகஸ்ட் 11-ம் தேதி மாநிலங்களவையில் பேசிய அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக மறுநாள் அவையில் கண்ணீர் விட்டார்.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாயா வெர்மா, ஆர். போரா, ராஜாமணி பட்டீல், சையத் நசீர் ஹுசைன், அகிலேஷ் பிரசாத் சிங், சிவசேனை கட்சியைச் சேர்ந்த எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. டோலா டென் உள்ளிட்ட 12 எம்.பி.க்கள் மாநிலங்களவையிலிருந்து இன்று இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையின் மாண்பைக் குறைக்கும் வகையில், கடும் அமளியில் ஈடுபட்டதாலும், அவை நடவடிக்கைகளை தடுத்ததாலும், 12 மாநிலங்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துள்ளதாக, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT