ஆர்எஸ்எஸ் ராணுவ அமைப்பு அல்ல. ஆனால், குடும்பச் சூழல் கொண்ட குழுவைக் கொண்டது என்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் இசைக் கருவிகளின் சங்கம விழா கடந்த 4 நாட்களாக நடந்தது. இதில் கடைசி நாளான நேற்று ஆர்எஸ்எஸ்அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''ஆர்எஸ்எஸ் அமைப்பு அனைத்து இந்திய இசைப் பள்ளி கிடையாது. தற்காப்புக் கலைகளும் கற்றுத் தரப்படும். ஆனால், அதேசமயம், ஆர்எஸ்எஸ் அமைப்பு உடற்பயிற்சிக் கூடமோ அல்லது தற்காப்புக் கலை கற்பிக்கும் இடமோ அல்ல. ஆர்எஸ்எஸ் அமைப்பைத் துணை ராணுவப்படை என்று கூட அழைக்கலாம். ஆனால், அதற்காக அது ராணுவ அமைப்பு அல்ல. ஆர்எஸ்எஸ் அமைப்பு என்பது குடும்பச் சூழல் கொண்ட குழு.
மேற்கத்திய நாடுகள் இசையைப் பொழுதுபோக்காகப் பார்க்கின்றன. இசை வாசிப்பது என்பது உற்சாகமாக அவர்களுக்கு இருக்கிறது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை இசை என்பது ஆன்மாவிற்கானது, மனதை சாந்தப்படுத்தும், அமைதிப்படுத்தும் கலை.
கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நாம் சுதந்திரம் அடைந்தோம். ஆனால், அதற்கான போராட்டம் 1857-ல் இருந்தே தொடங்கிவிட்டது. நம் சொந்த மண்ணிலேயே அந்நிய சக்தியிடம் தோற்றுவிட்டோம் என்ற எண்ணம் உருவானது.
அப்போதுதான் தவறுகளைச் சீர்செய்யும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. தொடர்ச்சியான அரசியல் மற்றும் சமூகச் சீர்திருத்தப் பணிகள் நடைபெற்றதால் சுதந்திரம் அடைந்தோம். தேசத்தைக் கட்டமைக்க அதிகமான முயற்சிகள் தேவைப்பட்டன.
தவறான நிர்வாகம், கொள்கையால் ஏற்பட்ட இழப்பைச் சரிசெய்ய 10 முதல் 2 ஆண்டுகள் தேவை. அரசியல்வாதிகள், அரசு, காவல்துறையினர் மூலம் கொண்டுவரும் வரப்படும் மாற்றங்களுக்கு சமூகத்தில் ஆதரவு இல்லாவிட்டால் அது சில காலம் மட்டுமே நீடிக்கும். இந்த தேசம் மாற்றம் அடைவதற்கு மதிப்பு மிகுந்த சமுதாயத்தைக் கட்டமைக்க வேண்டும். அந்த நம்பிக்கையான சமூகத்தை எழுப்பவே, உருவாக்கவே ஆர்எஸ்எஸ் அமைப்பு முயன்று வருகிறது''.
இ்வ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்.