இந்தியா

ஒமைக்ரான் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: சர்வதேச விமான சேவை தொடங்குவது தள்ளிவைப்பு?

செய்திப்பிரிவு

ஒமைக்ரான் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்குவது தொடர்பாக மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய உள்ளது. இதனால் சேவை தொடங்கும் தேதி தள்ளிப்போகும் என தெரிகிறது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச்23 முதல் சர்வதேச விமானப் போக்குவரத்தை இந்தியா நிறுத்தியது. `ஏர் பபுள்` என்ற கரோனா தடுப்பு விதிகளுடன் 25 நாடுகளுக்கு மட்டும் விமான சேவையை இயக்கஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது தொற்று பரவல் குறைந்த நிலையில் இந்தியாவில் இருந்து டிச.15 முதல் வெளிநாடுகளுக்கு மீண்டும் பயணிகள் விமான சேவை தொடங்க மத்திய விமான போக்குவரத்து துறை முடிவு செய்திருந்தது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சர்வதேச விமான சேவையை தொடங்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது.

தற்போது பரவி வரும் ஒமைக்ரான்வைரஸ் வகையானது மிகவும் ஆபத்தானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளுதல், தனிமைப்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இதன்தொடர்ச்சியாக சர்வதேச விமான சேவையை தொடங்கும் தேதியைதள்ளிவைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த டிசம்பர் 15-ம் தேதியில், மீண்டும் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்காது என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சர்வதேச விமான சேவையை இந்தியாவில் இருந்து தொடங்கும் முடிவுமறுபரிசீலனை செய்யப்படுகிறது. பிரதமர் மோடிஉத்தரவின்பேரில் மத்திய சுகாதாரத் துறை, விமானப் போக்குவரத்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்திய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT