திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி பாஜக அமோக வெற்றியை பெற்றது. இதையொட்டி, அகர்தலா அருகே உள்ள தர்மாநகர் பகுதியில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர். படம்: பிடிஐ 
இந்தியா

திரிபுராவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 217 இடங்களை கைப்பற்றி பாஜக அமோக வெற்றி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3; திரிணமூல் காங்கிரஸுக்கு ஒரு இடம் கிடைத்தது

செய்திப்பிரிவு

திரிபுராவில் அண்மையில் நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 217 இடங்களை கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. அதே சமயத்தில், பிரதான எதிர்க்கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3 இடங்களிலும், திரிணமூல் காங்கிரஸ் ஓரிடத்திலும் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன.

பாஜக ஆளும் திரிபுராவில் 20 மாநகராட்சிகளில் மொத்தமுள்ள 334 பஞ்சாயத்து மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் இம்மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் 112 இடங்களில் போட்டி இல்லாமலேயே பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், மீதமுள்ள 222 இடங்களுக்கான தேர்தல் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. இதற்காக மாநிலம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

தேர்தலின் போது பாஜகவினர் வன்முறையில் ஈடுபடுவதாக திரிண மூல் காங்கிரஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம் சாட்டின.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் அந்தக் கட்சிகள் வழக்கு தொடுத்தன. அவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், திரிபுரா உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புக் காக துணை ராணுவப் படைகளை அனுப்ப உத்தர விட்டது. அதன்படி துணை ராணுவப் படைகள் குவிக்கப் பட்டன. இதனைத் தொடர்ந்து, தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது. சில இடங்களில் மட்டும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின.

இந்த சூழலில், வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், மொத்தமுள்ள 222 இடங்களில் 217 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. குறிப்பாக, அகர்தலா மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகள், 13 நகராட்சி கவுன் சில்கள், 6 பஞ்சாயத்துகள் என அனைத்தையும் பாஜக கைப்பற்றி இருக்கிறது.

இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் ஓரிடத்திலும், பிராந்திய கட்சியான திப்ர மோத்தா ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

தேர்தல் வெற்றி குறித்து திரிபுரா கலாச்சாரத் துறை அமைச்சர் சுஷாந்த சவுத்ரி கூறுகையில், “திரிபுரா தேர்தலில் பாஜகவினர் வன்முறையில் ஈடுபடுவதாகவும், வாக்காளர்கள் மிரட்டப்படுவதாகவும் திரிணமூல் காங்கிரஸும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டும் தொடர்ந்து அபாண்ட குற்றச்சாட்டை கூறி வந்தன. பாஜக குறித்து பொய்யான புகார்களை கூறி மக்களையும் தவறாக வழிநடத்த முயற்சித்தன. ஆனால், அவர்களை மக்கள் நம்பவில்லை என்பது இப்போது தெரியவந்திருக்கிறது. இந்த மகத்தான வெற்றியை கொடுத்த திரிபுரா மக்களுக்கு கட்சி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

திரிணமூல் நம்பிக்கை

அதே சமயத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜகவினரின் அடக்குமுறை, குறைந்த அளவிலான நிர்வாகிகள் ஆகியவற் றையும் தாண்டி 20 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளை நாங்கள் பெற் றிருக்கிறோம். எங்களுக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி. இது தொடக்கம் தான்.

இனி திரிபுரா முழுவதும் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் புயல் வேகத்தில் பணியாற்று வார்கள். 2023-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி” என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

திரிபுராவில் 20 மாநகராட்சிகளில் மொத்தமுள்ள 334 பஞ்சாயத்து மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

SCROLL FOR NEXT