டிசம்பர் 15-ம் தேதி முதல் சர்வதேச விமானப் போக்குவரத்தை திட்டமிடப்படி தொடங்குவதில் மத்திய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வகை கரோனா வைரஸால் இந்த முடிவு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் நோய்த்தொற்று வேகமாக பரவத் தொடங்கிய நேரத்தில், கடந்த மார்ச் 2020 முதல் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டன. இந்தத் தடை 2021 நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அதேசமயம் 28 நாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் விமான சேவை நடைபெறுகிறது. இந்தநிலையில் பழையபடி சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து, சர்வதேச விமானங்களை இயக்குவதற்கான முயற்சியில் இந்திய அரசு 25 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்நிலையில் தான், தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.
இதனால், டிசம்பர் 15-ம் தேதி முதல் சர்வதேச விமானப் போக்குவரத்தை திட்டமிடப்படி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் இன்று உள் துறைச் செயலர் அஜய் பல்லா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இப்போதையை சூழலில் டிச.15 முதல் சர்வதேச விமானப் போக்குவரத்தைத் தொடங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யலாம் என்று முடிவு எட்டப்பட்டது. மேலும், தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், சீன நாடுகளில் இருந்து வருவோரை தீவிர கண்காணிப்பு, தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.