இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் டிசம்பர் 6-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.
இந்தியா – ரஷ்யா இடையே யான இருதரப்பு உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக இந்த மாநாடு நடைபெறவில்லை. இந்நிலையில், வரும் டிசம்பர் 6-ம் தேதி டெல்லியில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வரவுள்ளார். அவருடன் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கே ஷோய்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் ஆகியோரும் இந்தியா வருகை தருகின்றனர்.
அன்றைய தினமே பிரதமர் நரந்திர மோடியை விளாடிமிர் புதின் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதேபோல, ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இந்த சந்திப்பின் போது ராணுவம், வணிகம், முதலீடு, தொழில்நுட்பம் ஆகிய துறைகள் தொடர்பாக பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார். - பிடிஐ