மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பொதுபட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
அதிகரித்து வரும் பண வீக்கத்தை கருத்தில் கொண்டு தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் பட்ஜெட்டில் உச்ச வரம்பு உயர்த்தப்படவில்லை.
கடந்த பட்ஜெட்டை போன்று ரூ.2.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வருமான வரி கிடையாது.
ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை 30 சதவீதம் வருமான வரி விதிக்கப்படும்.
ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்கள் செலுத்தி வந்த உபரி வரி 12 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாடகைதாரருக்கு சலுகை
மேலும் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.3000 நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு கோடி பேர் பயன் அடைவார்கள்.
ரூ.5 லட்சம் வரை வருமானம் உடையவர்களுக்கான ஆண்டு வரிச்சலுகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
முதல்முறையாக வீடு வாங்கு வோரின் ரூ.35 லட்சம் வரையிலான வீட்டுக் கடன் வட்டியில் ரூ.50 ஆயிரம் கூடுதல் வரிச்சலுகை அளிக்கப்படும். எனினும் ரூ.50 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்படும்.
மூத்த குடிமக்கள்
மூத்த குடிமக்களுக்கு 3 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது. ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ஒரு கோடி வரை 30 சதவீதம் வருமான வரி விதிக்கப்படும்.
ரூ.1 கோடி மேல் வருவாய் ஈட்டும் மூத்த குடிமக்கள் இதுவரை செலுத்தி வந்த உபரி வரி 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.