கர்நாடகாவில் இன்று (புதன் கிழமை) முதல் தோல் வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வித் துறைக்கான அமைச்சர் ஷரண் பிரகாஷ் பட்டீல் விக்டோரியா மருத்துவமனையில் கர்நாடக மாநிலத்தின் முதல் தோல் வங்கியைத் திறந்து வைத்தார்.
பொதுவாக தோல் வங்கிகளுக்கு பிணவறைகளில் இருந்து தோல் எடுக்கப்பட்டு சேமிக்கப்படும். பிளாஸ்டிக் சர்ஜரிகளுக்கும், விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்தத் தோல் பயன்படும்.
விபத்துகளால் நோயாளிகள் இறப்பதற்கான முக்கியக் காரணம் தொற்று. இது குறித்துப் பேசிய விக்டோரியா மருத்துவமனையின் தலைவரான தேவதாஸ், "செயற்கைத்தோல் அல்லது தோல் வங்கி மூலம் எடுக்கப்பட்ட தோலைக் கொண்டு, காயமடைந்த உடல் பகுதிகளைக் குணப்படுத்தலாம். நோயாளியின் உடலில் சுமார் மூன்று வாரங்களுக்கு இருக்கும் இந்தத் தோல், சுருக்கம் அடைந்த பின்னர் அகற்றப்படும்" என்று தெரிவித்தார்.