பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தாக்குதலின்போது உயிரிழப்பதற்கு முன்பாக ஒரு தீவிரவாதியை விரட்டிச் சென்று சுட்டுக் கொன்ற ராணுவ வீரர் ஜெகதீஷ் சந்துக்கு நேற்று கீர்த்தி சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
வீரதீர செயல்கள் புரிந்த ராணுவ வீரர்கள் 58 பேருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று நடந்தது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது பதான்கோட் தாக்கு தலின் போது, உயிரிழப்பதற்கு முன்பாக, ஒரு தீவிரவாதியை துணிச்சலுடன் விரட்டிச் சென்று சுட்டுக் கொன்ற ராணுவ வீரர் ஜெகதீஷ் சந்துக்கு பிரணாப் முகர்ஜி கீர்த்தி சக்ரா விருது வழங்கினார். வீரதீர செயல்கள் மற்றும் துணிச்சலுக்காக வழங்கப் படும் இந்த விருதினை அவரது மனைவி பெற்றுக் கொண்டார்.
கடந்த ஆண்டு ஜம்மு காஷ் மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் உயிர் துறந்த கர்னல் எம்.என்.ராய்க்கு சவுரியா சக்ரா (உயிரிழந்தபின்) விருது வழங்கப்பட்டது.
இதே போல் ஜம்மு காஷ்மீர் மாநில காவலர்கள் முகமது ஷபி ஷேக் மற்றும் ரியாஸ் அகமது, பிஹார் நக்ஸல் தாக்குதலில் உயிரிழந்த ஹிரா குமார் ஆகியோருக்கும் சவுரியா சக்ரா (உயிரிழந்த பின்) வழங்கப்பட்டது.
பரம் விஷிஸ்ட் சேவா விருது கடற்படை துணைத் தலைவரான பி.முருகேசனுக்கும், உத்தம யுத்த சேவா விருது ராணுவ லெப்டி னென்ட் ஜெனரல் சுப்ரதா சஹாவுக் கும் வழங்கப்பட்டது.