தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசு தரப்பின் இறுதி வாதம் நிறைவடைந்தது.
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
கர்நாடக அரசு தரப்பில் ஆஜ ரான மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா 3-வது நாளாக முன்வைத்த இறுதி வாதம்: ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்துக்கு அலங்கார வளைவுகள், பிரமாண்ட மேடைகள், ஆடம்பர அலங்காரங்கள் என ரூ. 7 கோடி செலவு செய்யப்பட்டது.
திருமணத்துக்கான மொத்த செலவையும் மணப்பெண்ணின் தாய்மாமன் ராம்குமார் மற்றும் அதிமுக தொண்டர்கள் செய்தனர். ஜெயலலிதா ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என அவரது தரப்பு கூறியுள்ளது. ஆனால் 1998-ம் ஆண்டு ஜெய லலிதா தாக்கல் செய்த தனது வருமான வரி கணக்கில், சுதா கரனின் திருமணத்துக்கு ரூ.28 லட்சம் செலவிட்டதாக தெரிவித் துள்ளார். ஆனால் நீதிபதி குமார சாமி இதை கருத்தில் கொள்ள வில்லை.
ஜெயலலிதாவுக்கு ‘நமது எம்ஜிஆர்’ நாளிதழ் சந்தா மூலமாக ரூ. 14 கோடி, ஹைதராபாத் திராட்சை தோட்டம், பிறந்த நாள் பரிசு, வங்கி கடன் மூலமாக தனக்கு வருமானம் வந்ததாக கூறியதை நீதிபதி குமாரசாமி எவ்வித ஆதாரமும் இல்லாமலேயே ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஜெயலலிதா 1991-96 கால கட்டத்தில் சசிகலா, சுதாகரன், இளவரசியின் பெயரில் 36 தனியார் நிறுவனங்களை சட்ட விரோத மாக தொடங்கினார். இந்த நிறு வனங்களுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் வாங்கப் பட்டது. இந்த நிறுவனங்களின் பெயர்களில் 52 புதிய வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டன.
இந்த பினாமி சொத்துகள் மூலம் ஜெயலலிதாவுக்கு ரூ.10 கோடியே 65 லட்சம் வருமானம் வந்ததாக ஏற்றுக்கொண்டாலும், நீதிபதி குமாரசாமி ரூ.24 கோடியே 14 லட்சம் உயர்த்தி காட்டியிருப் பதை ஏற்க முடியாது. வருமான வரித்துறை ஏற்றுக்கொண்ட சொத்துகள் அனைத்தும் சட்டப்பூர்வமாக குவிக்கப்பட்ட சொத்துகளாக கருத முடியாது. வழக்கின் போக்கை திசை திருப்பவே ஜெயலலிதா வருமான வரித் தாக்கல் செய்ததாக நீதிபதி குன்ஹா தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
1991-96 காலகட்டத்தில் மாதம் ரூ.1 ஊதியம் பெற்ற ஜெயலலிதா ரூ. 66.65 கோடி சொத்து குவித்தது எப்படி என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே உச்ச நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தவறான தீர்ப்பை ரத்து செய்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும், எனக் கூறி ஆச்சார்யா தனது வாதத்தை நிறைவு செய்தார்.
இதையடுத்து நீதிபதிகள், வரும் திங்கள்கிழமை முதல் உச்ச நீதிமன்றத்துக்கு ஹோலி விடுமுறை தொடங்குவதால், வழக்கை வரும் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். அப்போது ஜெயலலிதா தரப்பின் இறுதிவாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.