ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜன நாயகக் கட்சித் (பிடிபி) தலைவர் மெகபூபா முப்தி நேற்று ஆளுநர் என்.என்.வோராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதுபோல சட்டப்பேரவையின் பாஜக தலைவர் நிர்மல் சிங்கும் ஆளுநரை நேற்று சந்தித்து, மெக பூபா தலைமையில் ஆட்சி அமைப் பதற்கு தங்கள் கட்சி ஆதரவு அளிக்கும் கடிதத்தை வழங்கினார்.
ஆளுநரை சந்தித்த பிறகு மெகபூபா செய்தியாளர்களிடம் பேசும்போது, “காஷ்மீரில் புதிய அரசு அமைவதற்கு ஆதரவளிக்க முன்வந்த பாஜகவுக்கு நன்றி. புதிய அரசு மாநிலத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சியை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்தும். பதவியேற்கும் நாள் குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்” என்றார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், பாஜகவும் பிடிபியும் இணைந்து கடந்த ஆண்டு கூட்டணி ஆட்சி அமைத்தன. இந்நிலையில், முதல்வர் முப்தி முகமது சையது உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜனவரி 7-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து மீண்டும் புதிய ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது.
இந்நிலையில், பிடிபி தலைவர் மெகபூபா முப்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து புதிய அரசு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டது.