பிரஸல்ஸில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் காணாமல் போன பெங்களூருவைச் சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேஷ் கடைசியாக பேசிய தொலைபேசி அழைப்பு தடம் காணப்பட்டது.
பெல்ஜியம் தலைநகரில் கடந்த செவ்வாயன்று விமானநிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் தொடர் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில் 31 பேர் உயிரிழந்ததோடு, மேலும் 300 பேர் காயமடைந்தனர். அன்றைய தினத்தில் இன்போசிஸ் ஊழியர் கணேஷ் ராகவேந்திரன் என்பவர் பற்றிய விவரங்களும் எதுவும் தெரியவில்லை.
இந்நிலையில் பிரஸல்ஸில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கணேஷ் ராகவேந்திரனின் கடைசி தொலைபேசி அழைப்பு செய்யப்பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
இது குறித்து சுஷ்மா தனது ட்விட்டர் பதிவில், “ராகவேந்திரன் கணேஷ் - இவரது கடைசி தொலைபேசி அழைப்பு பிரஸல்ஸ் நகரிலிருந்து சென்றதை தடம் கண்டுள்ளோம், அவர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்” என்று கூறியுள்ளார்.
குண்டுவெடிப்பில் காயமடைந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களான நிதி சபேகர், அமித் மோத்வானி ஆகியோர் உடல் நலம் தேறி வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.