கோப்புப்படம் 
இந்தியா

நோக்கு கூலி கேட்பவர்கள் மீது பணப்பறிப்பு வழக்கு பதிவு செய்யுங்கள்: கேரள காவல் துறை தலைவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

நோக்குக் கூலி கேட்பவர்கள் மீது பணப்புறிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு கேரள காவல் துறை தலைவருக்கு (டிஜிபி) உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளாவில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு செல்வாக்கு மிக்க தொழிற்சங்கங்கள் உள்ளன. எந்த நிறுவனத்தின் சரக்குகளாக இருந்தாலும், அவற்றை இறக்கி வைக்க, தொழிற்சங்கங்களில் பதிவுசெய்த சுமைதூக்கும் தொழிலாளர்களையே அந்நிறுவனத்தின் ஆட்கள் அணுக வேண்டும். அதற்கு தொழிலாளர்கள் கேட்கும் கூலியை அவர்கள் கொடுத்தாக வேண்டும்.

அவ்வாறு இல்லாமல், அந்நிறுவனமே சரக்குகளை இறக்கி வைக்கஆட்களை அழைத்து வந்தால், சுமை தூக்கும் தொழிலாளர்கள் அதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்க மாட்டார்கள். மாறாக, சரக்குகள் இறக்கி வைக்கப்படுவதை அவர்கள் வெறுமென வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். வேலை முடிந்ததும், சம்பந்தப்பட்டவர்களிடம் சென்று நோக்குக் கூலி (வேலை செய்வதை பார்த்ததற்கான கூலி) கேட்பார்கள். இந்தக் கூலியானது, சுமை தூக்க கேட்கும் கூலியை விட அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனை தர மறுப்பவர்கள் மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும் கேரளாவில் சகஜமாக நடந்து வருகிறது. இந்த நோக்குக் கூலியால் மாநிலத்தில் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு எதிராக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால், கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் நோக்குக் கூலி நடைமுறைக்கு கேரள அரசு தடை விதித்தது. இருந்தபோதிலும், இந்த வழக்கம் அங்கு தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், நோக்குக் கூலி நடைமுறையை ஒழிக்கக் கோரி உணவக உரிமையாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கேரள உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் கடந்த 1-ம் தேதி மாநில அரசு பதில் அளித்திருந்தது. அதில், கேரளா முழுவதும் “இனி நோக்குக் கூலி இல்லை” என்ற பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மனுவானது, நீதிபதி தேவன் ராமச்சந்திரன் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதி கூறியதாவது:

கேரளாவில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் கடுமையான வறுமை நிலையில் இருந்ததால், அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 1960-களில் நோக்குக்கூலி என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது. ஆனால், தொழிற்சங்கங்கள் பலம் மிக்கவையாக மாற மாற, இந்த நடைமுறையானது மிரட்டிப் பணம் பறிக்கும் நடவடிக்கையாக உருவெடுத்து விட்டது.

இந்த நடைமுறை கேரளாவுக்கு மிகப்பெரிய அவப்பெயரை பெற்றுதந்திருக்கிறது. கேரளா என்றாலே நோக்குக் கூலி என்று கூறும் அளவுக்கு இது சென்றுவிட்டது. இதனை பார்க்கும்போது, ‘தீவிரவாத தொழிற்சங்கங்களுடன்’ கேரளா இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே, நீண்டகாலமாக தொடர்ந்து வரும் இந்த மோசமான நடைமுறையை ஒழிக்க வேண்டியது அவசியமாகி உள்ளது. இனி கேரளாவில் நோக்குக் கூலிகேட்பவர் தனிநபராக இருந்தாலும் சரி, தொழிற்சங்கமாக இருந்தாலும் சரி, அவர்கள் மீது ‘மிரட்டிப் பணம்பறித்தல்’ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் போலீஸ் டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 8-ம் தேதிக்குநீதிபதி தள்ளி வைத்தார்.

SCROLL FOR NEXT