உத்தர பிரதேசத்தில் அனைத்து மாநில காவல் துறை தலைவர்கள், பாதுகாப்பு படை தலைவர்களின் 3 நாள் தேசிய மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்தது. இந்த மாநாட்டில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்றார். உ.பி. வந்த அவருக்கு அங்கு பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
உ.பி.யில், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணி அதிகாரிகள் சுமார் 40 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் பலர் டிஜிபிசைலேந்திர பாபு மற்றும் தமிழகதலைமைச் செயலர் வே.இறையன்பு ஆகியோர் அளித்த ஊக்கத்தால் உயர் அதிகாரிகளானவர்கள். இவர்களில் பலர் முதல் முறையாக கடந்த வாரம் வியாழன் அன்று லக்னோ வந்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவை ஒன்று கூடி வரவேற்றனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் உ.பி. ஆயத்தீர்வை ஆணையர் சி.செந்தில்பாண்டியன் கூறும்போது, ‘‘நான் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிலும் போது ஒவ்வொரு விளையாட்டு தினக் கொண்டாட் டங்களிலும் டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்று பேசுவார். அப்போது குடிமைப் பணி தேர்வுக்காக தொடர்ந்து அளித்த ஊக்கத்தால் என்னைப் போல் பலரும் கவரப் பட்டனர். இப்போது உ.பி.யில் பணிபுரியும் எங்களுடைய நிர்வாக திறமை, செயல்பாடுகளை நேரில் கேட்டறிந்து பாராட்டினார். தமிழகம் பெருமை கொள்ளும் வகையில் சிறப்பான பெயர் எடுக்க அனைவரையும் வாழ்த்தினார்’’ என்று தெரிவித்தார்.
தமிழகத்தின் குடிமைப் பணி பயிற்சியின் போது டிஜிபி சைலேந்திர பாபு எடுத்த மாதிரி நேர்முகத் தேர்வில், உடை, உடல் மொழி, கேள்விகளுக்குப் பதில் அளிப்பது உள்ளிட்ட ஆளுமைப் பயிற்சிகளை அளித்துள்ளார். அதன்பின் அதிகாரிகளான பலர் உ.பி.யில்அவரை முதல் முறையாக வரவேற்பதில் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உ.பி. நகர்ப்புற வளர்ச்சித் துறை சிறப்பு செயலாளர் அன்னாவி தினேஷ் குமார் கூறும்போது, ‘‘கடந்த 2012-ல் நானும் மற்றொரு அதிகாரி இந்துமதியும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற அவர் உந்துதலாக இருந்ததை நினைவுகூர்ந்தோம். உ.பி.யில் எங்கள் பணிகள், நிர்வாகம் குறித்து டிஜிபி ஆர்வமுடன் கேட்டறிந்தார். உ.பி.யின் வளர்ச்சிப் பணிகளில் மற்ற மாநிலங்களுக்கும் எங்களுக்கும் உள்ள அதிகார வேறுபாட்டை கேட்டறிந்தார்’’ என்று தெரிவித்தார்.
டிஜிபி சைலேந்திரபாபு கூறும்போது, ‘‘நான் தமிழக கல்வி மேடைகளில் அளித்த உரைகள் வீணாகாமல், குடிமைப் பணி அதிகாரிகளானவர்கள் உ.பி.யிலும்பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. உ.பி.யில் தமிழர்கள் பகிர்ந்த நிர்வாக திறன், சவால்களை கேட்டு வியப்படைந் தேன். அவர்களிடமும் அன்றாடம் உடற்பயிற்சி செய்து உடல்நலம் பேண அறிவுறுத்தினேன்’’ என்றார்.