அமலாக்க இயக்குனரகம் விஜய் மல்லையா ஆஜராக உத்தரவிட்டிருந்ததையடுத்து பல்வேறு காரணங்களைக் காட்டி அவர் ஏப்ரல் மாதம் வரை கால அவகாசம் கேட்டுள்ளார்.
அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் விஜய் மல்லையா நாளை (மார்ச் 18) நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் ஏப்ரல் வரை கால அவகாசம் வேண்டும் என்று விஜய் மல்லையா கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரியிடம் விஜய் மல்லையா விடுத்துள்ள கோரிக்கையை பரிசீலனை செய்வது வருவதாகவும் இது குறித்து இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது ஆஜராக கால அவகாசம் கேட்டு அவர் வைத்துள்ள கோரிக்கையில் அதற்கான காரணங்களை விசாரணை அதிகாரிகள் பரிசீலித்து கால அவகாச கோரிக்கையை ஏற்பதா இல்லையா என்பதை முடிவு எடுக்கவுள்ளனர்.
கடந்த வருடம் சிறப்பு புலானாய்வுப் பிரிவு விஜய் மல்லையா மற்றும் இதர நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. அதனை அடிப்படையாக வைத்து அமலாக்கப் பிரிவு அந்நிய செலாவணி வழக்கை விஜய் மல்லையா மீது தொடுத்தது. இந்த வழக்கில் மார்ச் 18-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பி இருந்தது.
இது தவிர மல்லையாவுக்கு வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் உள்ள சொத்து விவரங்களை பற்றி அமலாக்கப் பிரிவு தகவல்களை திரட்டி வருகிறது.