நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் வேளையில் பெட்ரோல் விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்டவற்றை கண்டித்து டிசம்பர் முதல் வாரத்தில் டெல்லியில் மெகா பேரணி நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி திட்டமிட்டு வருகிறார்.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 23-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடக்க உள்ளது. மொத்தம் 20 வேலை நாட்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் பஞ்சாப், உத்தராகண்ட், உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா சட்டப்பேரவைகளுக்கு தேர்தல்கள் நடக்க உள்ள நிலையில், வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ் விவகாரம், எரிபொருள் விலை உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.
இதனால் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை கோர வருகிற 28-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொள்கின்றன. பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார் என தெரிகிறது.
இந்தநிலையில் பெட்ரோல் விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்டவற்றை கண்டித்து டிசம்பர் முதல் வாரத்தில் டெல்லியில் மெகா பேரணி நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இது 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் மேற்கொண்ட முன்னெடுப்புக்கு நிகராக பெரிய அளவில் இந்த போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான திட்டமிடலை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மேற்கொண்டு வருகிறார்.
மத்திய அரசின் பணவீக்கத்திற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் இரண்டு வாரகாலம் ஜன ஜாக்ரன் அபியான் என்ற பெயரில் மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படுகிறது. இதில் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்று வருகிறார்.
இந்த பேரணியை டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடத்த காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கோரிக்கையை மத்திய அரசு இன்னும் ஏற்கவில்லை.