கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு வழங்கப்படும் அரவணப் பாயாசம் பற்றி இணையதளங்களில் சில வாரங்களாக செய்திகள் வெளிவந்தன.
இதனிடையே கொச்சியைச் சேர்ந்த எஸ்.ஜே.ஆர். குமார் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கேரளாவின் புகழ்பெற்ற, பாரம்பரியம் கொண்ட சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசாதம், நைவேத்தியம் தயாரிக்க வேறு மதத்தினர் பின்பற்றப்படும் முறையில் ஹலால் சான்று வழங்கப்பட்ட சர்க்கரை, வெல்லம் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அவ்வாறு பயன்படுத்துவது, இந்து மதத்தின் பாரம்பரியம், கோயிலின் மரபுகள், ஆகமங்கள் ஆகியவற்றுக்கு விரோதமானது.
நைவேத்தியம் தயார் செய்யப்படும்போது, சுத்தமான பொருட்களைக் கொண்டும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவது அவசியம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 3-வது பிரிவின்படி, இந்தச் செயல்கள் முற்றிலும் விரோதமானவை, விதிமுறைகளை மீறியவை" எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன், பி.ஜி. அஜித்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் கோயிலில் வழங்கப்படும் பிரசாதம், ஹலால் முறையில் தயாரிக்கப்பட்ட வெல்லம், சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படுகிறதா என்பது தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்குமாறு உணவுபாதுகாப்புத்துறை ஆணை யருக்கு உத்தரவிட்டனர்.