தேசிய அளவில் முஸ்லிம்களின் முக்கிய அமைப்பாக அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) கருதப்படுகிறது. இதன் நிர்வாகக் குழுவின் 2 நாள் கூட்டம் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று முன்தினம் முடிந்தது.
இக்கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முக்கியமாக, “இறைத்தூதர் முகம்மது நபி போன்ற புனித மானவர்களை நிந்தனை செய் பவர்களை தண்டிக்க சட்டம் இயற்ற வேண்டும். பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டாம்” என மத்திய அரசிடம் வலியுறுத்தப் பட்டுள்ளது.
ஷியா முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான வசீம் ரிஜ்வீ அண்மையில் ‘முகம்மது’ எனும் பெயரில்இந்தியில் நூல் ஒன்றை வெளியிட்டார். அதில் இறைத்தூதரான முகம்மது நபி பல வகையில் நிந்தனை செய்யப்பட்டிருந்தார். இதுபோல், இஸ்லாம் மதத்தினரைபலரும் நிந்திப்பது தொடர்வதால் இதைத் தடுக்க சட்டம் இயற்றமத்திய அரசிடம் வலியுறுத்தப் பட்டுள்ளது.
இத்துடன், "மதங்களின் புனித நூல்கள் மீது கருத்து கூறுவதை அரசும் நீதித்துறையும் தவிர்க்க வேண்டும். இதற்கானத் தகுதி அவற்றின் மதத்தலைவர்களுக்கு மட்டுமே உள்ளது" என மற்றொரு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து மதத்தினருக்குமான பொது சிவில் சட்டம் கொண்டு வருவது பாஜகவின் கொள் கைகளில் ஒன்றாக உள்ளது. கடந்த வாரம் இஸ்லாமியரின் வழக்கு ஒன்றை விசாரித்த உ.பி.யின் அலகாபாத் நீதிமன்றம், இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க பொது சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என கூறியது. இதனால் பொது சிவில் சட்டம் குறித்த அச்சம் முஸ்லிம்களிடம் எழுந்த சூழலில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் காசீல் ரசூல் இலியாஸ் கூறும்போது, “பல்வேறு மதங்களின் நம்பிக்கை கொண்ட இந்திய சமூகத்திற்கு பொது சிவில் சட்டம் பொருந்தாது. ஏனெனில், ஒவ்வொருவரும் தங்கள் மதத்தின் அடிப்படையில் வாழ்க்கையை பின்பற்றும் உரிமை நம் நாட்டில் உள்ளது. எனவே பொது சிவில் சட்டம் அமலாவது மத சார்பற்ற அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவே அமையும்” என்றார்.
மேலும் திரிபுராவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலும், வங்கதேசத்தில் இந்து கோயில்கள் மீதான தாக்குதலும் வருந்தக்கூடியது. கும்பல்களால் நடைபெறும் படுகொலையை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் மதவாதம் பரவுவதை தடுக்க வேண்டும். நிக்காஹ் எனும் திருமணங்களில் வீண் செலவு மற்றும்வரதட்சிணை கூடாது. திருமணங்களில் ஷரீயத் முறையை முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும். வஃக்பு வாரியச் சொத்துகளை விற்கும் உரிமை அரசு மற்றும் தனியார் அமைப்புகளுக்கு கிடையாது போன்ற பல தீர்மானங்கள் வாரிய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.