இந்தியா

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் அசாமில் மகா கூட்டணி

செய்திப்பிரிவு

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் இணைந்து மகா கூட்டணி அமைத்துள்ளன. இக்கூட்டணியில் இணைய காங்கிரஸுக்கும் அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது.

அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவரும், எம்.பி.யுமான பஹ்ருதீன் அஜ்மல் கூறியதாவது:

பாஜக மற்றும் அதன் மத அரசியலை எதிர்க்க அண்மையில் பிஹாரில் அமைக்கப்பட்டதைப் போல, மதச்சார்பற்ற அனைத்துக் கட்சிகளையும் மகா கூட்டணியாக ஒரே அணியில் திரட்ட விரும்புகிறோம். பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோருடன் இதுதொடர்பாக பேசினோம். அசாமில் காலூன்ற முயலும் பாஜகவுக்கு எதிராக இக்கூட்டணியில் இணைய காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்துள் ளோம். அசாம் கண பரிஷத் கட்சியை யும் இணைக்க விரும்பினோம். அது பாஜகவுடன் சென்று விட்டது. காங்கிரஸ் அமைதி காக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஐக்கிய ஜனதா தளம் பொதுச் செயலாளர் அருண்குமார் வஸ்தவா கூறும்போது, “தங் களுக்கு மாற்றுக் கட்சி இல்லை, பிரதமர் மோடிக்கு நிகரானவர் இல்லை என்ற தாக்கத்தை ஆரம்பத்தில் பாஜக ஏற்படுத்தி யிருந்தது. ஆனால், டெல்லி, பிஹாரில் மிக மோசமாக தோற்றது” என்றார்.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் மாநில அமைப்பாளர் கனக் கோகோய், கூட்டணியில் காங்கிரஸ் இணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அசாம் மதச்சார்பற்ற மாநிலம். இங்கு பாஜக காலூன்ற அனுமதிக்க மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 76 தொகுதிகளில் போட்டியிடும் எனத் தெரிகிறது. ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா 12 தொகுதிகளில் போட்டியிடவுள்ளன.

இக்கூட்டணியில் இதுவரை 29 வேட்பாளர்களின் பெயர்கள் அறி விக்கப்பட்டுள்ளன. நிதிஷ், லாலு, சரத் யாதவ் ஆகியோர் இங்கு பிரச் சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

SCROLL FOR NEXT