வரும் ஜனவரியில் இருந்து இணை நோய் உள்ள குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தடுப்பூசித் திட்டத்திற்கான தேசிய தொழிநுட்ப ஆலோசனைக் குழுவின் (NTAGI), ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மூன்றாவது பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
வரும் ஜனவரியில் இருந்து இணை நோய் உள்ள குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதேபோல் மார்ச் மாதம் முதல் தகுதியுடைய அனைத்து குழந்தைகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையில் சிக்கி லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நிலையில், அடுத்தக்கட்டமாக குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி வழங்குவது தான் இலக்கு என்று தடுப்பூசித் திட்டத்திற்கான தேசிய தொழிநுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் 12 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜைடஸ் கேடில்லா நிறுவனம் குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது.
உலகம் முழுவதுமே பூஸ்டர் டோஸ் அவசியமா என்ற வாதவிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பல ஐரோப்பிய நாடுகளும் பூஸ்டர் டோஸை ஊக்குவிக்கும் நிலையில், அமெரிக்காவும் அந்தப் பட்டியலில் கடைசியாக இணைந்துள்ளது.
இணை நோய் இல்லாதவர்களாக இருந்தாலும் கூட தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதியுடையவர்கள் அனைவருமே பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என அமெரிக்க அரசு மக்களை ஊக்குவித்து வருகிறது.