காவல் டிஜிபிக்கள் மாநாட்டில் நாட்டின் சட்டம் - ஒழுங்கை அமல்படுத்தும் அமைப்புகளின் நிலை பற்றி ஏன் பிரதமர் மோடி பேசவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநில டிஜிபிக்கள் 56-வது மாநாடு லக்னோவில் நடந்தது. அதில் பிரதமர் மோடி பங்கேற்றதைக் குறிப்பிட்டு ப.சிதம்பரம் பேசியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் போதை மருந்து வழக்கில் ஆதாரங்கள் ஏதும் இல்லை எனக் கூறி மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அந்த வழக்கில் போதை மருந்து தடுப்பு அமைப்பு (என்சிபி) செயல்பட்டதையும் சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “தேசிய போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றம் செய்யும் நோக்கில் ஆர்யன் கான் குற்றம் செய்யவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. ஆர்யன் கானைக் கைது செய்தவுடன் அவர் போதை மருந்து பயன்படுத்தினாரா, இல்லையா என்று ஏன் மருத்துவப் பரிசோதனை நடத்தவில்லை என்று நீதிமன்றம் விமர்சனம் செய்தது.
ஆதலால் எந்தச் சதியும் இல்லை, எந்தக் குற்றமும் இல்லை, எதற்காக இளைஞர்களை என்சிபி ஏன் குறிவைக்கிறது? இது திஷா ரவி வழக்கு மீண்டும் வந்ததுபோல் இருக்கிறது. இதுதான் நம்முடைய சட்டம் - ஒழுங்கு அமல்படுத்தும் அமைப்புகளின் நிலை. டிஜிபிக்கள் மாநாட்டில் சட்டம் - ஒழுங்கு அமைப்புகளின் நிலை பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.