சபரிமலை ஐயப்பன் கோயி லுக்கு பக்தர்கள் செல்ல விதிக்கப் பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மகரவிளக்கு, மண்டல பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் கலந்துகொண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைப்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கார்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோயிலில் மீண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்தது.
இதனிடையே, பத்தனம்திட்டா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பம்பை ஆற்றில் நேற்று முன்தினம் காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல பத்தனம் திட்டா மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் நிலக்கல் பகுதியிலேயே நிறுத்தப்பட்டனர்.
மாலையில் பம்பை ஆற்றில் வெள்ளம் குறைந்ததையடுத்து கோயிலுக்கு பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட நிர்வாகம் நீக்கியுள்ளது. இதையடுத்து, ஆன்லைன் மூலம் அனுமதி பெற்றிருந்த பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கை மாவட்ட நிர்வாகத்தினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆற்றில் அதிகரித்து வரும் நீர்மட்டத்தைப் பொருத்து பக்தர்கள் தரிசனம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.