வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த 700க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பத்துக்குத் தேவையான இழப்பீட்டை பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து வழங்கிட வேண்டும் என்று சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், அவற்றைத் திரும்பப் பெறக் கோரியும் டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தில் இதுவரை 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் உயிரிழந்த 700 முதல் 750 விவசாயிகளின் குடும்பத்துக்கு இழப்பீடாக தெலங்கானா அரசு சார்பில் தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அறிவித்தார்.
போராட்டத்தில் கைதான விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என பஞ்சாப் அரசு அறிவித்தது. உயிரிழந்த விவசாயிகளுக்கு மத்திய அரசுத் தரப்பில் இழப்பீடு வழங்கிட வேண்டும் என ஆம் ஆத்மி, காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில் சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் இன்று மும்பையில் நிருபர்களுக்குப் பேட்டிஅளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''டெல்லியில் நடந்த போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். பலர் தற்கொலை செய்து கொண்டனர். சிலர் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். சிலர் லக்கிம்பூர் கெரியில் கார் ஏற்றிக் கொல்லப்பட்டார்கள். அனைவரும் வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் போராடியவர்கள்.
தற்போது மத்திய அரசு தனது தவறுகளை உணர்ந்து, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.
நாட்டின் பல்வேறு தரப்பிலிருந்து எழும் கோரிக்கை என்னவென்றால், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும். பிஎம் கேர்ஸ் நிதியில் கிடக்கும் கணக்கிலடங்காத பணத்தின் மூலம் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும்.
வெறும் வாய்மொழியாக மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது. விவசாயிகளின் குடும்பத்தினருக்கும் உதவி, ஆதரவு வழங்கிட வேண்டும்''.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.