விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை, ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்பு, வேளாண் பொருட்கள் கொள்முதல் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதுதான் மத்திய அரசின் திட்டம் என்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதைத் திரும்பப் பெறக்கோரி கடந்த ஓராண்டாகப் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தின் விளைவாக, இந்த வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என பிரதமர் மோடி கடந்த இரு நாட்களுக்கு முன் மக்களுக்கு அறிவித்தார்.
ஆனால், விவசாயிகள் தரப்பிலோ வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்தச் சட்டங்களை முறையாக மத்திய அரசு திரும்பப் பெறும்வரை, குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கும் வரை, மின்சாரத் திருத்தச் சட்டம் திரும்பப் பெறும்வரை போராட்டத்தைக் கைவிடமாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மத்திய அரசின் கறுப்புச் சட்டங்களுக்கு எதிரான வெற்றியை நினைத்து இன்று மகிழ்ந்தாலும், நம்முடைய உண்மையான பணி இப்போதுதான் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் கொடும்பாவத் திட்டம் என்னவென்றால் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை, ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்பு, வேளாண் பொருட்கள் கொள்முதல் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதுதான்.
வேளாண் சட்டங்கள் இல்லாமல் பொது விநியோக முறை தொடரும். அதுவும் மறைக்கப்படும்போது ஆபத்தாக இருக்கும். கொள்முதல், சேமிப்பு மற்றும் சில்லறை வர்த்தகம் போன்றவற்றுக்குத் தனியார் துறைக்கு முதலீடு சென்று வருகிறது.
ஆனால், இதுவரை குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எந்த உத்தரவாதமும் மத்திய அரசிடம் இல்லை. கார்ப்பரேட் கையகப்படுத்திக் கொள்வதைத் தடுக்கும் வகையில் சிறு விவசாயிகளுக்கு பஞ்சாப் அரசு ஆதரவு அளிப்பது அவசியம். பஞ்சாப் மாடல்தான் ஒரே வழி.
மத்திய அரசு உண்மையாகவே விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நினைத்தால், அவரின் முக்கியக் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.