விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்ற சில அரசியல் கட்சிகள் விரும்புவதில்லை என்று பிரதமர்மோடி சாடியுள்ளார். விவசாயிகள்பிரச்சினைகளில் சிக்கியிருப்பதையே அவர்கள் விரும்புகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் மகோபா நகரில் பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
சில குடும்பங்களால் நடத்தப்படும் கட்சிகள் ஆளும் அரசுகள்,விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்ற விரும்பவில்லை. இந்தக் கட்சிகள் பிரச்சினைகளுக் கான அரசியலை பின்பற்றுகின்றன. ஆனால் பாஜக, தீர்வுக்கான அரசியலை பின்பற்றி வருகிறது.
சில குடும்பங்களால் நடத்தப்படும் கட்சிகள் ஆளும் அரசுகள்,விவசாயிகள் பிரச்சினைகளில்சிக்கியிருப்பதையே விரும்புகின்றன. அவர்களுடயை பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்புவதில்லை. விவசாயிகளின் பெயரில்அவை அறிவிப்புகளை வெளியிடுகின்றன. ஆனால் ஒரு பைசாகூட அவர்களை சென்றடையவில்லை. பிரதமர் கிசான் சம்மான்நிதியிலிருந்து விவசாயிகளுக்கு இதுவரை 1.62 லட்சம் கோடிரூபாயை நாங்கள் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளோம்.
விவசாயிகளை எப்போதும் பிரச்சினைகளுக்குள் வைத்திருக்கவேண்டும் என்பதே சில அரசியல்கட்சிகளின் அடிப்படை கொள்கையாக உள்ளது. நாங்கள் தீர்வுக்கான அரசியலை செய்யும்போது, அவர்கள் பிரச்சினைக்கான அரசியலை செய்கின்றனர்.
நதிகள் இணைப்பு
கென்-பெட்வா நதிகள் இணைப்புக்கான தீர்வு எங்கள் அரசால் கண்டறியப்பட்டுள்ளது. அனைத்துதரப்பினருடனும் பேசி நாங்கள்தீர்வு கண்டுள்ளோம். விவசாயிகளின் நலனுக்காக, விதைகள் முதல் சந்தை வரை அனைத்து நிலைகளிலும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அறிவித்த சில மணி நேரத்தில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.