மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை அமல் படுத்திய தும் பஞ்சாப் விவசாயிகள் முதல் முறையாகப் போராட்டத் தில் இறங்கினர். பிறகு அப் போராட்டம் பல்வேறு விவசாய அமைப்புகளுடன் டெல்லி எல்லைகளுக்கு மாறியது. இப்போராட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் மீது ஹரியாணா, டெல்லி மற்றும் உ.பி.யில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். உ.பி., உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில தேர்தல் அடுத்த ஆண்டு வரவிருப்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த 5 மாநில தேர்தலில் விவசாயிகள் ஆதரவை பெற அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற பாஜக ஆளும் ஹரியாணா அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து பாஜகவின் கூட் டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவரும் ஹரியாணா துணை முதல்வருமான துஷ்யந்த் சவுதாலா கூறும்போது, “குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு விவசாயிகளுக்கான பரிசாக வேளாண் சட்டங்கள் பிரதமரால் வாபஸாக உள்ளன. மேலும் விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறவும் மத்திய அரசி டம் பேசுவேன். அதன் பிறகு ஹரியாணா அரசால் போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் வாய்ப்புகள் உள்ளன” என்றார்.
வழக்குகளை ஹரியாணா வாபஸ் பெற்றால் மற்ற மாநிலங் களும் இதை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.