காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஜனவரி மாதம் வேளாண் சட்டங்கள் குறித்துப் பேசிய வார்த்தைகள் இப்போது ட்ரெண்டாகி வருகின்றன.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், அவற்றைத் திரும்பப் பெறக் கோரியும் விவசாயிகள் கடந்த ஓராண்டாகப் போராடி வந்த நிலையில் இந்த 3 சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்தார்.
ஆனால், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நிச்சயமாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த ஜனவரி மாதமே உறுதியாகத் தெரிவித்திருந்தார். அவர் கூறிய வார்த்தைகள்தான் இன்று ட்ரெண்டாகி வருகின்றன.
கடந்த ஜனவரி மாதம் தைத் திருநாளுக்கு மதுரை அவனியாபுரம் பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பார்ப்பதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வந்திருந்தார்.
அப்போது அங்கிருந்து புறப்படும் முன் மதுரை விமான நிலையத்தில் ராகுல் காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “என்னுடைய வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள்… இந்த 3 வேளாண் சட்டங்களையும், மத்தியில் ஆளும் மோடி அரசு வலுக்கட்டாயமாகத் திரும்பப் பெறும். நான் கூறியதை நினைவில் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக இன்று அறிவித்தபின், ராகுல் காந்தி கடந்த ஆண்டு பேசியது குறித்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறுகையில், “ராகுல் காந்தியின் வார்த்தை இன்று தீர்க்க தரிசனமாக இருக்கிறது. மதுரை மண்ணில் கால்வைத்து ராகுல் காந்தி பேசியது, இன்று நடந்துள்ளது. அதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், அறுவடைத் திருநாளன்று கறுப்பு வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராகுல் காந்தி பேசியிருந்தார். இதன் மூலம் விவசாயிகள் தங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக விடாப்படியாக இருந்தார்கள், அவர்களுக்கு காங்கிரஸ் பலமாக இருந்தது.
வேளாண் சட்டங்களில் மட்டும் ராகுல் காந்தியின் நிலைப்பாடு தெரியவில்லை. கரோனா வைரஸ் நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்றும், பண மதிப்பிழப்பு குறித்தும் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக எச்சரித்தார். அவை அனைத்தும் உண்மையாகவே நடந்துவிட்டன. இந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வைத்தமைக்கு முழுமையான காரணம் விவசாயிகள்தான்'' என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.