வங்கிகளில் கடன் பெற்று வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிய பொருளாதாரக் குற்றவாளிகள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தார்.
கடன் வழங்க தாராள நிதி புழக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் காணொலி மூலமாக பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: வங்கிகளில் கடன் பெற்று வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளை இந்தியாவுக்குக் கொண்டு வர அனைத்து நிலையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக சம்பந்தப்பட்ட நாடுகளின் சட்டம் மற்றும் ராஜீய உறவு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக லண்டனில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, வைர வர்த்தகர் நீரவ் மோடி ஆகியோரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 2019-ம் ஆண்டு தொழிலதிபர் விஜய் மல்லையா, பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மும்பையில் உள்ள அந்நியச் செலாவணி தடை சட்ட சிறப்பு நீதிமன்றம்விஜய் மல்லையாவை பொருளாதாரக் குற்றவாளியாக அறிவித்தது.
பிஎம்எல்ஏ சட்டத்தின்படி பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபர், இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு தப்பியோடியிருந்தால் அவரை நாட்டிற்கு திரும்ப அழைத்து வர பிறப்பிக்கப்படும் கைது வாராண்டாகும். இதன்மூலம்அந்த நபருக்கு இந்தியாவில் உள்ளசொத்துகளை பறிமுதல் செய்யும்அதிகாரம் புலனாய்வு அமைப்புகளுக்கு அளிக்கப்படுகிறது.
தேசிய சொத்து மீட்பு நிறுவனம் எடுத்த நடவடிக்கையால் ரூ.5 லட்சம்கோடி வாராக் கடன் மீட்கப்பட்டுள்ளது. இதில் வங்கித் துறையின் நிதிச்சுமை ரூ.2 லட்சம் கோடி வரைமீட்டெடுக்கப்பட்டதில் என்ஏஆர்சிஎல்லுக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிகள் மிகச் சிறப்பானபங்களிப்பை அளிக்க முடியும்.இந்தியா சுயசார்பு பொருளாதாரத்தை எட்டுவதில் சிறப்பாக செயல்பட வங்கிகள் உதவ முடியும்.இப்போதைய சூழலில் வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் சொத்து உருவாக்கம் மிகவும் அவசியம். அத்தகைய பணியில் வங்கிகள் உள்ளதால் அவற்றின் நிதிநிலை ஸ்திரமாக இருக்க வேண்டியது அவசியம்.
வங்கித் துறை மிகவும் ஸ்திரமான நிலையை எட்டியிருப்பதற்கு அதில்மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களே காரணம். திவால் மசோதா உள்ளிட்ட சீர்திருத்தங்கள் மற்றும்கடன் மீட்பு தீர்ப்பாயங்களுக்கு அதிக அதிகாரம் உள்ளிட்டவைவங்கித் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களாகும். ஒவ்வொரு வங்கியிலும் குறைந்தபட்சம் 100 வாடிக்கையாளர்களாவது டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களாக இருக்க வேண்டும். இந்த இலக்கை ஆகஸ்ட் 15,2022-க்குள் எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கித்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஜன்தன் திட்டம் மிகச்சிறப்பானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை
கான்பெராவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆஸ்திரேலிய உத்திசார் கொள்கை வகுக்கும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த அமைப்புக்கு ஆஸ்திரேலிய அரசு மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை நிதி உதவி வழங்குகிறது.
இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அதில் ஏற்பட்ட புரட்சி என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை உரை நிகழ்த்தினார். காணொலி மூலம் நடைபெற்ற இம்மாநாட்டில் பிரதமர்பேசும்போது, "டிஜிட்டல் உலகம் நம்மைச் சுற்றி பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. உதாரணத்துக்கு மெய்நிகர் கரன்சியான கிரிப்டோ கரன்சியை சொல்லலாம்.
எனவே, இந்த கரன்சிகளின் பரிவர்த்தனை உரிய வகையில்நடைபெறுவதற்கான வழிவகைகளை ஜனநாயக நாடுகள் கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். இந்த பரிவர்த்தனையின் பலன் தவறானவர்களின் கையில் சென்றடைந்துவிடக்கூடாது. அவ்விதம் சென்றால் அது வளரும் இளம் சமுதாயத்தை பாதிப்பதாக அமைந்துவிடும்" என்றார்.