கரோனா பாதிப்பு காரணமாக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாயின. இந்நிறுவனங்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நிதி மற்றும் கடன் திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இந்தியசிறு நிறுவனங்கள் மேம்பாட்டு வங்கி (சிட்பி) கூகுள் நிறுவனத்துடன் இணைந்து எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ரூ.110 கோடி (15 மில்லியன் டாலர்) கடன்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி ரூ.5 கோடி வரை ஆண்டு விற்பனைஉள்ள எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.25 லட்சம் முதல் ரூ.1 கோடி வரைகடன் வழங்க சிட்பி திட்டமிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் பிரதான நோக்கம் பெண் தொழில் முனைவோர்களின் நிறுவனங்களுக்கு வட்டிச் சலுகையுடன் கடன்உதவி வழங்குவது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிட்பி வங்கியின் தலைவர் சிவசுப்ரமணியன் ராமன்கூறும்போது, "கூகுள் நிறுவனத்துடனான இந்த ஒப்பந்த்தின் மூலம் எம்எஸ்எம்இ துறையின் கடன் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். இதன் மூலம் இந்திய எம்எஸ்எம்இ துறையில் நிகழ உள்ள தாக்கத்தைக் காண ஆவலுடன் உள்ளோம்" என்றார்.
கூகுள் இந்தியாவின் துணைத்தலைவர் சஞ்சய் குப்தா கூறும்போது, "நாட்டின் மிகப்பெரிய எம்எஸ்எம்இ துறையின் வளர்ச்சிக்கான தேவையையும், அத்துறையின் கடன் விநியோகத்தையும் ஆழமாகப் புரிந்து வைத்துள்ள சிட்பி வங்கியுடன் இணைவதன் மூலம் இந்திய எம்எஸ்எம்இ துறைக்கு எங்களுடைய சேவையைவிரிவுபடுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.-பிடிஐ