டெல்லி அருகிலுள்ள கிரேட்டர் நொய்டாவின் சூரஜ்பூரில் விலை உயர்ந்த கைப்பேசிகள் விற்கும் சைபி மார்க்கெட் உள்ளது. இங்குள்ள ஒரு கடையில் கடந்த நவம்பர் 5-ம் இரவு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கைப்பேசிகள் மற்றும் அதன் உபகரணங்கள் கொள்ளை யடிக்கப்பட்டன. இது தொடர்பாக கடை உரிமையாளர் இர்பான் கான், கிரேட்டர் நொய்டா காவல் துறை குற்றப்பிரிவில் புகார் செய்திருந்தார்.
இக்கொள்ளையை கண்டு பிடிக்க கிரேட்டர் நொய்டா குற்றப் பிரிவின் உதவி ஆணையரான ஜி.இளமாறன் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது. தமிழரான இளமாறன் மன்னார்குடியை சேர்ந்த கால்நடை மருத்துவப் பட்டதாரி ஆவார். கிரேட்டர் நொய் டாவில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உதவியால் கொள்ளையர்கள் ஹரியாணாவின் மேவாட் பகுதியில் உள்ள நூ, பல்வல் மாவட்டங்களின் பாவ்லா, படக்கா, ஒட்டாவத் ஆகிய கிராமங் களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது.
நொய்டாவிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள இந்த மாவட்டங்களின் கிராமங் களில் போலீஸார் புகுந்து கொள்ளையர்களை கைது செய்வது ஆபத்தானதாகக் கருதப் படுகிறது.
ஏனெனில், கடந்த காலங்களில் இங்குள்ள கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற பல்வேறு மாநில போலீஸார் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால், அந்த கிராமங்களுக்குச் செல்ல போலீஸார் தயங்குவது உண்டு.
களம் இறங்கிய 65 போலீஸார்
இந்நிலையில் தமிழரான இளமாறன் 15 வாகனங்களில் துப்பாக்கிகள் ஏந்திய 65 போலீ ஸாருடன் நேற்று முன்தினம் இரவு சென்றார். இதில், கொள்ளை யர்களான ராஷீத் (25), இர்பான் முகம்மது (26), சுஹேல் (24), கிதாத் எனும் ஷப்பீர் (24), ஹக்கூ எனும் ஹக்கீமுத்தீன் (23) ஆகிய 5 பேரை கைது செய்தார். இந்த 5 பேரில் ஹக்கூ பற்றிய தகவலுக்கு மதுரா போலீஸார் ரூ.10 ஆயிரம் வெகுமதி அறிவித்துள்ளனர்
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் உதவி காவல் ஆணையர் ஜி.இளமாறன் கூறும்போது, “பல நாட்களாக கண்காணிப்பு கேமரா பதிவுகளை பொறுமையுடன் ஆராய்ந்ததில் சந்தேகத்திற்குரியதாக ஒரு கார் சிக்கியது. இதன் பதிவு எண் போலியாக இருப்பினும் சுங்கச்சாவடிகளை கடக்க அதில் ஒட்டப்பட்டிருந்த பாஸ்டேக் மூலம் அவர்களை கண்டுபிடித்தோம். கொள்ளையர்கள் இருந்த கிராமத் தில் அவர்களது ஆதரவாளர்கள் ஆயுதங்களுடன் தாக்கும் அபாயம் உள்ளதாக அறிந்து பெரும் படையுடன் சென்றோம்” என்றார்.
இச்சம்பவத்தில், திருடப்பட்ட காருடன், ரூ.70 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன. நான்கு கள்ளத் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. இதன் காரணமாக இளம் ஐபிஎஸ் அதிகாரியான இளமாறன் தனது சக அதிகாரிகளின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.
இந்த வழக்கின் புலனாய்வு, திரைப்படக் காட்சிகள் போல் இருப்பதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.